IND vs ENG 4th Test Day 4 Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி அபார வெற்றி:
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த போது, 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து, 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். தொடர்ந்து, கில் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோலி, கே.எல். ராகுல், பும்ரா, ஷமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாருமே இன்றி, போதிய அனுபவமே இல்லாத இளம்படையினரை கொண்டு, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. பேஸ்பால் கிரிக்கெட் என்ற பாணியில் டெஸ்ட் போட்டிகளை அணுகி வந்த பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
போட்டியின் சுருக்கம்:
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 122 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக ஒல்லி ராபின்சன் 58 ரன்களையும், ஃபோக்ஸ் ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் இளம் வீரர் துருவ் ஜுரெல் 90 ரன்களை எடுக்க, ஜெய்ஷ்வால் 73 ரன்களை சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் பஷிர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பில் கிராவ்லி அதிகபட்சமாக 60 ரன்களை சேர்க்க, அஷ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 192 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 55 ரன்களையும், சுப்மன் கில் 52 ரன்களையும் சேர்த்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுரெல் 39 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
டெஸ்ட் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும், அதிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி அடுத்தடுத்து 3 போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது. இதன் மூலம், 2012ம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற மோசமான சாதனை இன்னும் தொடர்கிறது. இதையடுத்து, தொடரின் கடைசிப் போட்டி, மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.