இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்தபோட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நிதானமாக விளையாடிய துருவ் ஜூரெல்:
இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்தது. பினர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது களம் இறங்கிய துருவ் ஜூரல் நிதனமாக விளையாடி இந்திய அணிக்கு 149 பந்துகளில் 90 ரன்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோர் ஓரளவுக்கு முன்னேறியது. இவ்வாறாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 307 ரன்களை எடுத்தது. இதனிடையே தடுமாறிய இந்திய அணியை தன்னுடைய நிதான ஆட்டத்தால் மீட்டெடுத்த துருவ் ஜூரலை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
கார்கில் போர் வீரரான தந்தைக்கு சல்யூட்:
இந்நிலையில், தனது இரண்டாவது டெஸ்டில் அரைசதம் அடித்த பிறகு, துருவ் ஜூரல் தனது அரை சதத்தை சல்யூட் அடித்து கொண்டாடினார். இதன் மூலம் கார்கில் போர் வீரரான இவரது தந்தை நேம் சந்துக்கு சல்யூட் அடித்துள்ளார் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கூறிவருகின்றனர். முன்னதாக, கடந்த ஐபிஎல் ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விக்கெட் கீப்பராக இணைந்தார் துருவ் ஜூரல். ரூ.20 லட்சம் அடிப்படை விலைக்கு அணியில் இணைந்த ஜூரெல், ராஜஸ்தான் அணியின் ஆடும் 11வில் விளையாடிய ரியான் பராக்கின் மந்தமான செயல்பாட்டால் துருவ் ஜூரெல்லுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி தன்னுடைய அறிமுக போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான கடைசி ஓவரில் 4 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச்செய்தார். இதன் மூலம், ரியான் பராக்கை விட ஜூரெலை ஒரு பினிஷராக நம்பக்கூடிய பேட்ஸ்மேனாக ராஜஸ்தான் பார்க்கத் தொடங்கியது. அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஐ.பி.எல் தொடருக்கு பின்னர், உள்நாட்டு கிரிக்கெட்டிலும், ஏ அணியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, 22 வயதான துருவ் ஜூரெல் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார்.
அப்பாவின் எதிர்ப்பு அம்மாவின் ஆதரவு:
பள்ளியில் நீச்சல் வகுப்பிற்குச் செல்வதாக தனது தந்தையிடம் பொய் சொல்லி கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார் ஜூரல். இவரது தந்தை கார்கில் போரின் போது இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். சிறுவனாக இருந்த போதே ஆக்ராவிலிருந்து நொய்டாவில் உள்ள பூல்சந்த் கிரிக்கெட் அகாடமிக்கு தனியாக வந்த ஜூரெல் என்னை உங்கள் அகாடமியில் சேர்த்துக் கொள்வீர்களா? என்று கேட்க இவரை பார்த்து பயிற்சியாளருக்கு ஆச்சரியம். இதனிடைய தன்னுடைய கிரிக்கெட் ஆர்வத்தால் தன்னுடைய தந்தையிடம் பேட் ஒன்றை வாங்கி கேட்டுள்ளார் துருவ்.
ஆனால், அந்த சமயத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியில் இவரது குடும்பம் இருந்ததால் இவரது தந்தையால் இவருக்கு பேட் வாங்கி குடுக்க முடியவில்லை. கடைசியாக துருவ் தன்னுடைய நண்பர்களிடம் கடனாக வாங்கிய 800 ரூபாயில் பேட் ஒன்றை வாங்கினார். ஹவில்தாராக இருந்த தனது தந்தை தனது மேலதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பதை ஜூரல் விரும்பவில்லை.
தான் பெரிய கிரிக்கெட் வீரராக மாறினால், தன் தந்தை யாருக்கும் முன்னால் சல்யூட் அடிக்க வேண்டியதில்லை என்பதில் ஜூரல் உறுதியாக இருந்தார். தொடக்கத்தில், அவரது தந்தை அவரை அரசாங்க வேலைக்கு முயற்சிக்குமாறு வற்புறுத்தினார், ஆனால் ஜூரலின் கிரிக்கெட் திறமையைப் பார்த்து, அவர் இறுதியாக அவருக்கு பிடித்ததை செய்ய அனுமதித்தார். இதற்கிடையில், ஜுரெல் ஒருமுறை தனது கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல கிரிக்கெட் கிட் வாங்கச் சொன்னபோது, அதை வாங்க அவனது தந்தையிடம் பணம் இல்லை. 8000 ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் கிட் வாங்க தன்னிடம் பணமில்லை என்றும், கிரிக்கெட்டை நிறுத்திவிட்டு வேலை வாங்கித் தருமாறும் அவரது தந்தையிடம் கேட்டுள்ளார.
அப்போது அவரது தாயார் ஜூரலுக்கு தங்க நகையை விற்று கிட் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் ஜூரலுக்கு முதல்முறையாக கிரிக்கெட் கிட் கிடைத்தது. இவ்வாறாக UP இன் U-14 மற்றும் U-16 அணிகளில் இடம்பிடித்தார். இந்தியாவின் U-19 உலகக் கோப்பை அணியிலும் விளையாடினார். உலகக் கோப்பையில் விளையாடி கிடைத்த பணத்தில் வீட்டில் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் கட்டினார். கடந்த ஆண்டு உ.பி., ரஞ்சி அணியில் இடம் பிடித்தார். ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட இறுதியாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய ராணுவ வீரரின் மகனான துருவ் ஜூரல் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டதால் ரசிகர்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்.