சென்னையில் இன்று நடைபெறும் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி  நடப்பாண்டுக்கான 50வது ஓவர் உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரானது சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில்  நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்றுள்ளது.


இந்தியாவில் வைத்து போட்டி நடைபெறுவதால் இம்முறை கோப்பையை இந்திய அணியே வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் இந்திய அணி லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை இன்று எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டியை ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களும் எதிர்நோக்கியுள்ளனர். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. 


நம்பிக்கையுடன் களம் காணும் இந்தியா 


ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தான் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. இதனால் அந்த நம்பிக்கையுடன் இந்த போட்டியில் களம் காண்கிறது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா மற்றும் பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி, சிராஜ், ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ் என பலம் வாய்ந்த அணியாகவே இந்தியா திகழ்கிறது. மிடில் ஆர்டரில் மட்டும் நிலைத்து நின்று விளையாடினால் இன்னும் அதிகமாக ரன் குவிக்கலாம்.


5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா 


அதேசமயம் 5 முறை உலகக்கோப்பை சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை குறைத்து எடை போட்டு விட முடியாது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாகவே உள்ளது. கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், உலகக்கோப்பையில் தனது திறமையை நிரூபிக்க வெற்றியுடன் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சேப், ஹேசில்வுட், சீன் அப்பாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா என ஒரு படையே மிரட்ட காத்திருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இரு அணி வீரர்கள் விவரம் (கணிப்பு)


இந்தியா: ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ்.


ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கேமரூன் க்ரீன், மார்னஸ் லேபுஸ்சன், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா 




மேலும் படிக்க: Kamal Haasan - Jovika: உயிரக் கொடுத்து கல்வி அவசியமா.. ஜோவிகா -விசித்ரா சண்டையில் ‘மய்யமாக’ கருத்து சொன்ன கமல்!