SL Vs SA WC 2023: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் 4வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணியின் டி காக், டு சென், மார்க்ரம் ஆகியோரின் சதத்தினால் உலகக் கோப்பைத் தொடரிலேயே அதிக ரன்கள் குவித்தது. 50 ஓவர்கள் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக மார்க்ரம் 49 பந்துகளில் சதம் விளாசி உலகக்கோப்பை தொடரில் அதிவேகமாக சதம் விளாசியவர் என்ற சாதனையைப் படைத்தார். 


அதன் பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் பதும் நிஷ்கண்ணா தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல், ஜான் விசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் இழந்தார். இதனால்  இலங்கை அணிக்கு பின்னடைவாக பார்க்கபடும் என நினைத்த தென் ஆப்ரிக்கா அணிக்கு தோல்வி பயத்தை சற்று நேரத்தில் உருவாக்கினார் குஷால் மெண்டிஸ். தென் ஆப்ரிக்காவின் அனைத்து பந்து வீச்சாளர்களின் ஓவர்களிலும் பவுண்டரிகளை பறக்க விட்டார். இதனால் இலங்கை அணியின் ரன் மளமளவென உயர்ந்தது. அணியின் ஸ்கோரில் 90 சதவீதம் ஸ்கோர் இவருடையதாக இருந்தது. இவரின் அதிரடி ஆட்டத்தால் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். இவர் அதிரடியாக சிக்ஸர்கள் விளாசுவதில் கவனமாக இருந்தார். 


அணியின் ஸ்கோர் 109 ரன்களாக இருந்தபோது குஷால் மெண்டிஸ் தனது விக்கெட்டினை இழக்க, தென் ஆப்ரிக்க அணி நிம்மதி அடைந்தது. அதன் பின்னர் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், இலங்கை அணியின் அசலங்கா அதிரடி காட்ட மீண்டும் தென் ஆப்ரிக்காவுக்கு பயம் தொற்றிக்கொண்டது. அசலங்காவும் அரைசதம் கடந்த பின்னர் 79 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்தார்.


அவ்வளவுதான் இலங்கை அணி முடிந்தது என நினைத்துக்கொண்டு இருந்த தென் ஆப்ரிக்காவுக்கு இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா சிறப்பாக ஆடினார். குறிப்பாக போட்டியின் 37வது ஓவரில் முதல் பந்தில் சிக்ஸரும் அடுத்த நான்கு பந்தில் பவுண்டரியும் விளாசினார். இதனால் அவர் தனது அரைசத்தையும் பதிவு செய்தார். 


சிறப்பாக ரன்கள் குவித்து வந்த ஷனாகா தனது விக்கெட்டினை 68 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேற இலங்கை அணியின் தோல்வி உறுதியானது. அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் டைல்-எண்டர்ஸ் தங்களால் முடிந்தவரை இலங்கை அணியின் தோல்வி வித்தியாசத்தை குறைக்க போராடினர். 


இறுதியில் இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் தென் ஆப்ரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் இணைந்து மொத்தம் 31 சிக்ஸர்கள் விளாசியுள்ளது. இதில் தென் ஆப்ரிக்கா அணி 14 சிக்ஸர்களும் இலங்கை அணி 17 சிக்ஸர்களும் விளாசியுள்ளது.