பிக் பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7 Tamil) நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரம் சர்ச்சைக்குள்ளான ஜோவிகா -விசித்ரா சண்டை பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளர்களான விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே படிப்பின் அவசியம் பற்றி வாக்குவாதம் எழுந்தது. நேற்றைய எபிசோடில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், “படிப்பு எனக்கு வரலனு நிப்பாட்டினேன். நான் கஷ்டப்பட்டேன்” என ஜோவிகா கூறினார்.
அப்போது பேசிய விசித்ரா “அடிப்படைக் கல்வி முக்கியத்துவம் பற்றி தான் நான் பேசினேன். ஜோவிகாவின் தனிப்பட்ட விஷயம் பற்றி நான் பேசினேன். என்னோட பசங்களும் சுமாரா படிக்கிறவர்கள் தான். அதுக்கு அப்பறம் என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும். எதையும் நான் தவறாக சொல்லவில்லை. நம்முடைய பெற்றோர் தேவையான கல்வியைக் கொடுக்க தயாராக இருக்கும்போது படிக்காவிட்டால் எப்படி எனும் நல்ல எண்ணத்தில் தான் கேட்டேன்” எனப் பேசினார்.
அப்போது பேசிய ஜோவிகா, “கல்வி மற்றும் பொதுஅறிவு முக்கியம் தான். ஆனால் இன்றைக்கு எத்தனை பேர் நீட் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? படிப்பு என்கிற விஷயத்துல தற்கொலை, தவறான பாதையில போறாங்க. அதை மாற்ற வேண்டுமென்ற எண்ணத்தை முன்வைத்து தான் நான் இங்க வந்தேன். எல்லோரும் டாக்டரா போய்விட்டால் யார் தான் கம்பவுண்டர் ஆகுறது. படிச்சி தான் பெரிய ஆள் ஆகணும் என இல்லை” எனப் பேசினார்.
மேலும், தனக்கு படிப்பு வராததால தனக்கு அழுத்தம் தர வேண்டாம் எனும் கருத்தினை தன்னை முன்னிலைப்படுத்தி ஜோவிகா வைத்தார். இந்நிலையில், இந்த வார வீக் எண்ட் எபிசோடில் கமல் இதுகுறித்து என்ன பேசப்போகிறார் என எதிர்பார்த்து ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களும் காத்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் ப்ரோமோவில் நடிகர் கமல்ஹாசன் இந்த விவகாரத்தில் தன் கருத்தைப் பேசியுள்ள காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் “ஜோவிக்கா.. நீங்க எப்பயாவது கல்வி முக்கியமில்லனு சொல்லி இருக்கீங்களா.. விசித்ராவின் இண்டன்ஷன் தப்பு இல்ல.. ஜெனரேஷன் இடைவெளி.
வரலனா விட்ரணும்.. உயிரக் கொடுத்தாவது கல்வி முக்கியமில்லனு சொல்றவங்க நாங்க.. குறைகள சொல்லும்போது உடனே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பலருக்கும் இருக்காது. கற்றல் விதி இருக்கலாமே தவிர கற்றல் வதை இருக்கக்கூடாது” என கமல் பேசியுள்ளார்.
கமல்ஹாசன் ஜோவிகா - விசித்ரா இருவருக்கும் ஆதரவு மற்றும் குட்டுவைத்து நடுநிலையாக பேசியுள்ளது போல் இந்த வீடியோவில் தெரிகிறது.
இந்நிலையில், இன்று இரவு வெளியாகும் வீக் எண்ட் எபிசோடில் கமல் என்ன பேசப்போகிறார் என எதிர்பார்த்து பிக்பாஸ் மட்டுமல்லாமல் பலதரப்பு ரசிகர்களும் காத்துள்ளனர்.