ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


அதன்படி, நடப்பு உலகக் கோப்பையில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தது இலங்கை அணி. இச்சூழலில், இலங்கை  அணி உலகக் கோப்பை தொடர்களில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


தொடர் தோல்வியில் இலங்கை அணி


கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் தனது முதல் போட்டியை விளையாடியது இலங்கை அணி.


அந்த போட்டியில், முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விகெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்கள் எடுத்தது. பின்னர், 429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


அடுத்ததாக கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்ற 8 வது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியுடன் மோதியது இலங்கை. அந்த போட்டியில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்தது.


பின்னர், களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48. 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 345 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.



அதேபோல், நேற்று (அக்டோபர் 16) உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது இலங்கை.


எப்படியாவது தங்களது வெற்றிக்கணக்கை இந்த உலகக் கோப்பை தொடரில் தொடங்கி விட வேண்டும் என்று களமிறங்கிய இலங்கை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  


இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 35. 2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


ஜிம்பாப்வேயுடன் இணைந்த இலங்கை:


உலகக் கோப்பை தொடரில் அதிக தோல்விகளை சந்தித்த அணியாக திகழ்கிறது ஜிம்பாப்வே அணி . தற்போது இந்த அடுத்தடுத்த தோல்விகளால் இலங்கை அணியும் அந்த பட்டியலில் ஜிம்பாப்வே அணியை சமன் செய்துள்ளது.


அதன்படி, இதுவரை மொத்தம் 58 போட்டிகளில் விளையாடி உள்ள ஜிம்பாப்வே அணி 12 போட்டிகளில் வெற்றியும், 42 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேபோல், இலங்கை அணி இதுவரை 85 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில்  42 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதன்படி 81 போட்டிகள் விளையாடி உள்ள அந்த அணி 36 தோல்விகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: SA Vs NED World Cup 2023: இரண்டு அணிக்கும் ‘ஹாட்ரிக்’ - வெற்றி முனைப்பில் தென்னாப்பிரிக்கா - தோல்வி தடுப்பில் நெதர்லாந்து! இன்று பலப்பரீட்சை


 


மேலும் படிக்க: SA Vs NED Score LIVE: மீண்டும் விளையாடும் மழை.. நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்து வீச முடிவு