SA Vs NED World Cup 2023: தர்மசாலாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 15வது லீக் போட்டியில், ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் தென்னாப்ரிக்காவும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் முனைப்பில் நெதர்லாந்து அணியும் களமிறங்க உள்ளது.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், தற்போது வரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தென்னாப்ரிக்கா, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
தென்னாப்ரிக்கா - நெதர்லாந்து மோதல்:
பஞ்சாப் மாநிலம் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இதுவரை விளையாடிய முதல் 2 லீக் போட்டிகளிலும் தென்னாப்ரிக்க அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நெதர்லாந்து அணிதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ஹாட்ரிக் வெற்றி பெற தென்னாப்ரிக்க அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க நெதர்லாந்து அணியும் இன்றைய போட்டியில் மல்லுக்கட்டுகின்றன.
பலம் & பலவீனங்கள்:
தென்னாப்ரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அந்த அணியின் முக்கிய பலமாக இருக்க, பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு கடும் நெருக்கடி தந்து வருகின்றனர். அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னாள் கேப்டன் டிகாக், அந்த அணியின் பேட்டிங் தூணாக ஜொலிக்கிறார். விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர் சதம் விளாசியுள்ளார். மறுமுனையில் போதிய அனுபவம் இல்லாத நெதர்லாந்து அணி, வலுவான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. பேட்டிங் அவர்களது பலமாக இருக்க பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
நேருக்கு நேர்:’
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ன. அனைத்திலும் நெதர்லாந்தை வீழ்த்தி தென்னாப்ரிக்க அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.
மைதானம் எப்படி?
தர்மசாலா மைதானம் தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், நேரம் செல்ல செல்ல இது பந்துவீச்சிற்கு சாதகமாக மாறக்கூடும். இதனால், பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும்.
உத்தேச அணி விவரங்கள்:
தென்னப்ரிக்கா:
குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி
நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ரியான் க்ளீன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்