இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1970ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பெங்களூரில் பிறந்தார் அனில் கும்ப்ளே. கும்ப்ளேவின் ஆரம்பகாலம் பெங்களூருவில் உள்ள ஹோலி செயிண்ட் ஆங்கிலப் பள்ளியில் தொடங்கியது. அங்கையே உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து கிரிக்கெட் வீரராகவும் வளர்ந்தார்.  ராஷ்ட்ரிய வித்யாலயா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தவர், பின்பு அப்படியே கிரிக்கெட் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார். 


இந்திய அணிக்காக இதுவரை 403 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கும்ப்ளே, ஒட்டுமொத்தமாக 956 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதில், 37 முறை 5 விக்கெட்களும், 8 முறை 10 விக்கெட்களும் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார் கும்ப்ளே. 


இந்தநிலையில், கும்ப்ளே செய்த சம்பவங்களை இங்கு காணலாம்... 


1, 1991- பாகிஸ்தானுக்கு எதிராக 10/74 :


அனில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புது சரித்திரம் படைத்தார். 1956 இல் ஜிம் லேக்கருக்குப் பிறகு ஒரு இன்னிங்ஸில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் இந்திய மற்றும் இரண்டாவது பந்துவீச்சாளர் ஆனார்.






இந்திய அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அனில் கும்ப்ளே 14 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.


2, 2004 - 8-141 & 4-138 எதிராக ஆஸ்திரேலியா:


இந்திய அணிக்காக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆகியோர் பார்ட்னர்ஷிப்பை அமைத்து 353 ரன்கள் குவித்தனர். அந்த போட்டியில் கும்ப்ளே, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினார். 


3, 1993- 6-12 vs வெஸ்ட் இண்டீஸ்: 


கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 1993 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது அனில் கும்ப்ளே எந்த இந்திய சுழற்பந்து வீச்சாளராலும் செய்ய முடியாததை செய்து காட்டி அசத்தினார். 6.1 ஓவர்கள் வீசிய கும்ப்ளே 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் எதிரணியின் மிடில் ஆர்டரை கிழித்து அணியை 123 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.


கும்ப்ளேவின் சாதனைகள்: 



  • இங்கிலாந்தின் ஜிம் லேக்கருக்குப் பிறகு டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே ஆவார். 1999ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெல்லி டெஸ்டில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

  • இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் 619 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

  • அனில் கும்ப்ளே 50 ஓவர் ஒருநாள் வடிவத்தில் 334 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

  • கடந்த 1996ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் 61 விக்கெட்களை வீழ்த்தி ஒரே காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை படைத்தார்.

  • கும்ப்ளே தனது புகழ்பெற்ற டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தம் 40,850 பந்துகளை வீசியுள்ளார், இது இலங்கையின் கிரேட் முத்தையா முரளிதரனுக்குப் பிறகு வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச பந்துவீச்சாகும்.