கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாவாக கருதப்படுவது உலகக்கோப்பை. டி20 உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்றவை இருந்தாலும் 50 ஓவர் உலக கோப்பைக்கு என தனி மவுசு உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் 50 ஓவர் உலக கோப்பை, கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்றது.
உலகக்கோப்பை எப்போது தொடங்குகிறது?
இந்த சூழ்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த முறை உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 2011 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்தியா அணி கைப்பற்றியிருந்தது.
அதன் பிறகு நடைபெற்ற இரண்டு உலகக்கோப்பையிலும் அரையிறுதி வரை சென்ற இந்தியா அணி, தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலகக்கோப்பை எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல, நவம்பர் 19ஆம் தேதி, இறுதி போட்டி நடைபெறலாம் என கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட உள்ளது.
இறுதி போட்டி எங்கு?
போட்டியை நடத்துவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சுமார் 12 மைதானங்களை தேர்வு செய்துள்ளதாகவும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத் மோடி மைதானத்தை தவிர்த்து பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை ஆகிய மைதானங்களில் உலகக்கோப்பை தொடரை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
உலகக்கோப்பை தொடர் 46 நாட்கள் நடைபெறும் என்றும், மொத்தம் 48 ஆட்டங்களைக் கொண்ட அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதேபோன்று பயிற்சி ஆட்டங்களுக்காக மேலும் சில மைதானங்கள் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகள் எப்போதும் நடைபெறும் என்ற அறிவிப்பு ஓராண்டுக்கு முன்னரே வெளியிடப்படும்.
ஆனால், போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளதால் பாகிஸ்தான் வீரர்களுக்கான விசா வழங்குதல், வரி சலுகைகள் உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து ஐசிசி காத்து கொண்டிருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து, பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் விளையாடுவதற்கு விசா மறுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக அவர்களுக்கு மத்திய அரசு விசா வழங்கும் என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிக்க: Zimbabwe vs Netherlands: உலகக்கோப்பைக்கு தகுதி பெற மல்லுகட்டு..! 12வது இடத்திற்கு மோதும் ஜிம்பாப்வே vs நெதர்லாந்து..!