ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடர் தற்போது உலக கிரிக்கெட் அரங்கின் கவனத்தினை தன் பக்கம் ஈர்த்துள்ளது. 


ஜிம்பாப்வே - நெதர்லாந்து மோதல்:


ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அணி மொத்தம் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு, அதில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. இந்த ஒருநாள் போட்டித் தொடர் என்பது இரு அணிகளுக்கு இடையிலான போட்டி என்பதை விட உலகக்கோப்பை போட்டித் தொடருக்கு தகுதி பெறும் அணி எது எனபதை தீர்மானிக்கும் தொடர் என்பதால் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 


முதல் போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 249 ரன்கள் சேர்த்து இருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி ஒரு பந்தை மீதம் வைத்து 7 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


ஹாட்ரிக் விக்கெட்டுகள்:


அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியின் வீஸ்லி மதிவீரே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் இவர்தான். இதற்கு  முன்னர்  1997ம் ஆண்டு எட்டோ பிராண்டிஸ் இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதன் பின்னர் பிராஸ்பர் உட்ஷேயா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக தற்போது வீஸ்லி மதிவீரே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 






உலகக்கோப்பை தொடர்:


இரு அணிகளுக்கும் இடையிலான போட்டித்தொடர் 1 - 1 என்ற கணக்கில் இருப்பதால், தொடரை யார் வெல்வார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று (மார்ச், 25) நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உலகக்கோப்பை சூப்பர் லீக் அட்டவணையில் 12வது இடத்தில் ஜிம்பாப்வேயும், 13வது இடத்தில் நெதர்லாந்தும் உள்ளதால், இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.