2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து அணி மற்றொரு அடியை எதிர்கொண்டுள்ளது. ஏற்கனவே அவர்களது கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் இந்த உலகககோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகவுள்ளார் என்று தெரியவந்துள்ளது. டி20 ப்ளாஸ்டில் விளையாடும் போது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவரால் 6 முதல் 8 மாதங்களுக்கு விளையாட முடியாது என்று தெரிய வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக முதல் போட்டியில் களம் இறங்கிய போதே காயமடைந்த கேன் வில்லியம்சனை அந்த அணி ஏற்கனவே இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்திற்கு பெரிய அடி
பிரேஸ்வெல் இங்கிலாந்தில் நாளை (வியாழக்கிழமை, ஜூன் 15) அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. அதன் பின்னர் நீண்ட மறுவாழ்வு அமர்வை தொடங்குவார் என்பதால், நிச்சயமாக இந்த ஆண்டு உலகக் கோப்பையில் அவரால் இடம்பெற முடியாது என்று உறுதியாகி உள்ளது. நியூசிலாந்துக்கு இது இரண்டாவது பெரிய அடியாகும், ஏனெனில் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராக திகழ்ந்து வரும் அவரை நியூசிலாந்து அணி உலகக் கோப்பையில் இழக்க உள்ளது சோகம்தான்.
இந்த ஆண்டின் சிறந்த வீரர்
"முதலாவதாக, காயம் ஏற்படும் போது நாம் எப்பொழுதும் வீரர்களுக்காக வருந்துவோம், குறிப்பாக அவர்கள் ஒரு உலக நிகழ்வை இழக்க நேரிடும்போது, மிகவும் மோசமான உணர்வாக அது இருக்கும்" என்று நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறினார். பிரேஸ்வெல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒருநாள் போட்டியில் அறிமுகமான நிலையில், இதுவரை 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 118.6 ஸ்டிரைக் ரேட்டில் 510 ரன்களை அடித்துள்ள அவர் இரண்டு சதங்களும் எடுத்துள்ளார்.
பயிற்சியாளர் பேட்டி
அணிக்கு தேவையான நேரத்தில் பேட்டிங் செய்ய வந்து முக்கியமான ரன்களை குவித்து தருவதில் அணிக்கு பெரும் உதவியை செய்து கொண்டிருக்கும் அவர், அதோடு சேர்த்து 15 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹைதராபாத்தில் 350 ரன்களைத் துரத்தும்போது, 78 பந்துகளில் 140 ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். "பிரேஸ்வெல் அணியின் வெற்றிக்காக விளையாடும் ஒரு சிறந்த வீரர். நியூசிலாந்திற்காக கடந்த 15 மாதங்களாக சிறப்பாக விளையாடியுள்ளார். அவரது முதல் போட்டியில் இருந்தே, பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சில் அவரது தனித்துவமான திறமைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம், மேலும் அவர் இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை அணிக்கு மிகவும் முக்கியமான வீரராக உருவெடுத்து வந்ததார். ஆனால் இந்த காயத்தால் அவரே மிகவும் ஏமாற்றமடைந்துள்ளார், ஆனால் காயங்கள் விளையாட்டில் சகஜம் என்பதை ஒப்புக்கொண்டு, நடைமுறைக்கு பழகி வருகிறார். தற்போது அவர் தனது மறுவாழ்வு மீது கவனம் செலுத்துகிறார்," என்று ஸ்டெட் மேலும் கூறினார்.