நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பிரபல நடிகை விநோதினி வைத்தியநாதன் இணைந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 


ரசிகர்களை கவர்ந்த விநோதினி வைத்தியநாதன்


2011 ஆம் ஆண்டு வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் வினோதினி வைத்தியநாதன். வித்தியாசமான குரல், நடிப்பு என ரசிகர்களை கவர்ந்த அவர் தொடர்ந்து  கடல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ஜிகர்தண்டா, பிசாசு, ஓ காதல் கண்மணி, பசங்க 2, அரண்மனை 2, அழகு குட்டிச் செல்லம், அப்பா, ஆண்டவன் கட்டளை, ராட்சசன்,வேலைக்காரன், எல்.கே.ஜி, கோமாளி,  பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 


மத்திய அரசை விமர்சித்து வீடியோ


சோசியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வினோதினி கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டார். குறிப்பாக கடந்தாண்டு நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசி, பருப்பு, தயிர்  உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்குஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனையடுத்து  இந்திய ரூபாயை விட அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டதை விமர்சித்து அடுத்த வீடியோவை வெளியிட்டார். இதுவும் இணையவாசிகள் இடையே வைரலானது. 


மக்கள் நீதி மய்யத்தில் வினோதினி 


இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை வினோதினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு பெரிய பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 


அதில், “கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?


அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?

அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து.. இந்து மதக்கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?

அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒரு முறை கள்ள ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் debug பண்றதுக்கு காசில்ல சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ பகுத்தறிவு பேசுற கட்சி?

அஞ்ஞானவாதி: பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேக்குறாங்க சாமி. அதுலயும் யாகம்லாம் செய்யுறாங்க.

கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ கரப்ஷன்? மதவாதப் பிரிவினை?

அஞ்ஞானவாதி: எந்தப்பக்கம் நடந்தாலும் குரல் கொடுப்பேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, அப்போ ஏன் மய்யம்? ஒரு சீட்டுகூட இல்லையே?

அஞ்ஞானவாதி: சீட்டு குலுக்கிப்போட்டு இந்த பதவி எடுத்துக்கோ அந்தப்பதவி எடுத்துக்கோங்குறதுக்கு இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி. சார்ஜ் சீட் செய்யப்பட்ட ஆளுங்களும் இல்லையே சாமி… சீட்டு விளையாடுறத ஆதரிக்கிற கூட்டமும்…

கடவுள்: போதும் போதும்… சீட் என்று மூன்று முறைக்கு மேல் சொல்லியதால் நீ ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டாய்.

அஞ்ஞானவாதி: இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி. ஆரம்பிக்கலாங்களா? ....மய்ய அரசியல…” என தெரிவித்துள்ளார்.