இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 க்கான எதிர்பார்ப்புகள் இப்போதே எகிறியுள்ளன. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான சாத்தியமான அணியை ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவித்தது. 18 பேர் கொண்டு அறிவிக்கப்பட்ட அந்த அணியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு தேர்வாக இளம் வீரர் ஒருவரை அந்த அணி அறிமுகப்படுத்தியுள்ளது. 18 பேரிலும் வித்தியாசமாக தெரிந்த அந்த பெயரை பலர் யார் இவர், எப்படி இந்த இடத்தை பிடித்தார் என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
லெக் ஸ்பின்னர் தன்வீர் சங்கா
லெக் ஸ்பின்னர் தன்வீர் சங்கா என்னும் அறிமுக வீரரை தான் ஆஸ்திரேலிய அணி லிஸ்டில் சேர்த்துள்ளது. 21 வயதான இவர் இந்தியாவின் ஜலந்தரை பூர்வீகமாக கொண்டவர் என்று தெரியவந்துள்ளது. அவரது தந்தை, ஜோக் சங்கா, 1997 இல் ஜலந்தர் அருகே உள்ள ரஹிம்பூர் கிராமத்தில் இருந்து குடிபெயர்ந்து, சிட்னியில் ஓட்டுநராக பணிபுரிகிறார். அவரது தாயார் அப்னீத் கணக்காளராக உள்ளார். ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்திய வம்சாவளி சுழற்பந்து வீச்சாளர் மற்றும் நான்காவது இந்திய வம்சாவளி வீரர் ஆவார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை
சங்காவின் திறன் மிக விரைவாகவே ஆஸ்திரேலிய அணிக்கு தெரிய வர, இந்திய மைதானங்களில் சுழல் புயல் வீசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஆறு ஆட்டங்களில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இரண்டு நான்கு விக்கெட்டுகள் மற்றும் ஒரு ஐந்து விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலியாவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக அந்த தொடரில் திகழ்ந்தார். ஆஸ்திரேலியாவால் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில், நட்சத்திர பேட்டர், மார்னஸ் லாபுசாக்னே இடம்பெறவில்லை. அவருடைய இடம் தான் இந்த லெக் ஸ்பின்னருக்கு வந்துள்ளது.
நேரடியாக உலகக்கோப்பையில் அறிமுகம்
U-19 உலகக்கோப்பையில் அவரது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, அவர் 2021 இல் நியூசிலாந்தில் ஆஸ்திரேலியாவின் T20I தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதில் எந்த போட்டியிலும் களம் காணவில்லை. ஆகவே நேரடியாக உலகக்கோப்பையில் களம் காணப்போகும் நான்காவது ஆஸ்திரேலிய வீரராக மாறியுள்ளார். சங்காவுக்கு முன், குரிந்தர் சந்து, ஸ்டூவர்ட் கிளார்க் மற்றும் பிரான்ஸ்பி கூப்பர் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். லெக் ஸ்பின்னராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கும் முன் சங்கா ஒரு வேகப்பந்து வீச்சாளராகத் இருந்துள்ளார். தன்வீர் சங்கா தனது டீன் ஏஜ் பருவத்தில் சுழற்பந்து வீச்சுக்கு மாறியுள்ளார்.
பிக்பாஷ் மற்றும் முதல் தர கிரிக்கெட்
2020-21 சீசனில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக அவர் தனது முதல் பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) தனது திறனை வெளிப்படுத்தினார். 14 போட்டிகளில் 18.28 சராசரி மற்றும் 8.08 என்ற எகனாமி விகிதத்தில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்த சீசனில் அவர் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தன்வீர் சங்கா முதுகு அழுத்த காயத்தில் இருந்து மீண்டு வருவதால், ஏறக்குறைய ஒரு வருடமாக விளையாடவில்லை. அவர் இதுவரை எட்டு முதல் தர ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளையும், ஐந்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளையும், 28 டி20 ஆட்டங்களில் 37 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த மிஸ்ட்ரி ஸ்பின்னர் இந்திய மண்ணில் பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கையில் ஆஸ்திரேலிய அணி அவரை தேர்வு செய்துள்ளது. அதோடு இந்திய பின்னணியையும் கொண்டிருப்பதால் அவரால் இங்கு நன்றாக பந்து வீச முடியும் என்று கணித்துள்ளனர். இவருடைய தேர்வு ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது எதிரணிகளை சோதிக்குமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.