அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளது.


5 நாட்கள் விசாரணைக் காவல்:


உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை,  அமலாக்கத்துறை 5 நாட்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால், சற்றும் தாமதிக்காமல்  அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக புழல் சிறைக்கு செல்ல, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில்  மத்திய போலீஸ் படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.


இதையும் படிங்க..


Samudrayaan Mission: சந்திரயானை விடுங்க, சமுத்ரயான் தெரியுமா? ரூ.5000 கோடி செலவு, ஆழ்கடலில் 20 ஆயிரம் அடி பயணம்..!


காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்:


புழல் மத்திய சிறை அதிகாரிகளிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் கீழமை நீதிமன்ற உத்தரவின் நகலை கொடுத்தபோது, அதிகாரபூர்வ இ-மெயில் மூலம் கீழமை நீதிமன்றத்தில் இருந்து தங்களுக்கு உத்தரவு நகல் கிடைக்கவில்லை என சிறைத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை 6 மணியில் இருந்து சிறையில் காத்திருந்து,  இரவு 8.30 மணிக்கு செந்த்ல் பாலாஜியை விசாரணைக் காவலில் எடுத்தனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி காரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு இரவு 9.10 மணிக்கு  அழைத்துவரப்பட்டார். 


சாஸ்திரி பவனில் செந்தில் பாலாஜி:


 சாஸ்திரி பவனின் மூன்றாவது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக  கிடைத்த ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்வி எழுப்பப்பட்டது. ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராக வைத்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் 50 கேள்விகள் என்ற அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி அவரது தரப்பு பதிலை பதிவு செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தயார் நிலையில் ஆம்புலன்ஸ்:


அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை செவதால்,  சாஸ்திரி பவன் வளாகத்தை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயார் நிலையில் அதிநவீன ஆம்புலன்சும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதி சற்றே பரபரப்பாக காணப்படுகிறது.


12ம் தேதி விசாரணை:


முன்னதாக அமலாக்கத்துறை கைது நடவடிக்கை செல்லாது என செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியை 5 நாட்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது. இந்த விசாரணைக்காக, செந்தில் பாலாஜி காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு இருமுறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். aஅனால்,  5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் இதுதொடர்பாக வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிப்பதாகவுன்ம்,  5 நாட்கள் காவல் முடிவடைந்ததும் செந்தில் பாலாஜியை 12-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.