SunRisers Hyderabad: ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளில் ஒன்றான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. 


காவ்யா மாறன் சோகம்:


ஐபிஎல் தொடரில் எப்போதும் சோதனைக்கு உள்ளாகும் அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஒன்று. இந்த அணி கடந்த 2016ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் கோப்பையை வென்றது. அதன் பின்னர் இந்த அணி கோப்பையை நெருங்ககூட முடியவில்லை. அதற்கு அந்த அணி நிர்வாகத்தின் மீதும், வீரர்கள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் தரப்பில் வைக்கப்பட்டது. கடந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், சன்ரைசர்ஸ் அணிக்கு நல்ல நல்ல வீரர்களை தேர்வு செய்யுங்கள். போட்டியின்போது காவ்யா மாறன் மிகவும் சோகமாக இருப்பதை காணமுடியவில்லை எனக் கூறியிருந்தார். 


புதிய பயிற்சியாளர் வெட்டோரி:


ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணி தங்கள் அணிக்கான தலைமை பயிற்சியாளராக இருந்த லாராவை நீக்கிவிட்டு வேறு யாராவது ஒருவரை நியமனம் செய்ய திட்டமிட்டுவருவதாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், இன்று அதாவது ஆக்ஸ்ட் மாதம் 7ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமாக இருந்த டேனியல் வெட்டோரியை நியமித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹைதராபாத் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 






சமீபத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் தனது அணியின் தலைமை பயிற்சியாளரை மாற்றியது குறிப்பிடத்தக்கது.