இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நேற்று ஹைதரபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது.


ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 188 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் பந்திலே விராட்கோலி சிக்ஸரை விளாசினார். அடுத்த பந்தில் விராட்கோலி ஆட்டமிழந்தார்.




ஆனால், அவர் வீரர்கள் அறைக்கு செல்லாமல் அறைக்கு செல்லும் வழியில் இருந்த படியில் தனது பேடுடன் கேப்டன் ரோகித்சர்மாவுடன் அமர்ந்து ஆட்டத்தின் முடிவிற்காக ஆவலுடன் காத்திருந்தார். கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற சூழலில், ஹர்திக்பாண்ட்யா அபாரமாக பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதனால், இந்திய அணி தொடரையும் வென்றது.






இதை, படிக்கட்டுகளில் அமர்ந்து ரோகித்சர்மாவுடன் பார்த்த விராட்கோலி மிகுந்த உற்சாகம் அடைந்தார். படிக்கட்டிலே இருவரும் மகிழ்ச்சியை ஆனந்தமாக வெளிப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




முன்னதாக, இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் 1 ரன்னிலும், ரோகித்சர்மா 17 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட்கோலி – சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இவர்களது அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.


36 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்த நிலையில், சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க விராட்கோலி 48 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 63 ரன்களை விளாசி வெற்றிக்கு அருகில் வந்தபோது அவுட்டானார். கடைசி கட்டத்தில் 16 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 25 ரன்களுடன் களத்தில் இருந்த ஹர்திக் பாண்ட்யா இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றியால் இந்திய அணி உற்சாகம் அடைந்துள்ளது.


மேலும் படிக்க : IND vs AUS 3rd T20: அரைசதம் கடந்த கோலி, சூர்யகுமார்..ஆஸியை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா..


மேலும் படிக்க : IND vs AUS 3rd T20: சர்ச்சையை கிளப்பிய மேக்ஸ்வேல் ரன் அவுட் செல்லுமா..?- ஐசிசியின் விதி கூறுவது என்ன?