இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ளன. இந்தத் தொடரின் கடைசி டி20 போட்டி இன்று ஹைதரபாத்தில் நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இந்தப் போட்டியில் அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்பட்டது. 


 


இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேம்ரூன் க்ரீன் அதிரடி காட்டினார். இவர் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. 


 






இதைத் தொடர்ந்து 187 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து கேப்டன் ரோகித் சர்மா ஒரளவு அதிரடி காட்டினார். அவர் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிக்சர் பவுண்டரிகளாக விளாசினர்.


 


இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாசி வந்தனர். இதன்காரணமாக இந்திய அணி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது விக்கெட்டிற்கு 62 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் விளாசி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவைப்பட்டது. 


 







சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் தன்னுடைய 33வது அரைசதத்தை கோலி எடுத்திருந்தார். கடைசி 18 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 19.5 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. மேலும் 2022ஆம் ஆண்டில் இந்திய அணி அதிகமான டி20 போட்டிகளை வென்ற அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது. இந்தாண்டு தற்போது வரை இந்திய அணி 21 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.