இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேம்ரூன் க்ரீன் அதிரடி காட்டினார். இவர் முதல் ஓவர் முதல் சிக்சர் பவுண்டரி விளாச தொடங்கினார். அத்துடன் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 


மறுமுனையில் கேப்டன் ஃபின்ச் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். கேம்ரூன் க்ரீன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த அதிரடி ஆட்டக்காரர் க்ளென் மேக்ஸ்வேல் 6 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது ரன் எடுக்க முயற்சி செய்தார். அப்போது அக்‌ஷர் பட்டல் பவுண்டரி கோட்டின் அருகே இருந்து பந்தை துள்ளியமாக ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். ஸ்டெம்ப் அருகில் நின்ற விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஒரு பெயில்ஸை தட்டிவிட்டார். எனினும் பந்து வந்து நேராக ஸ்டெம்பில் பட்டது. இதைத் தொடர்ந்து ரன் அவுட் முறைக்கு இந்திய வீரர்கள் முறையிட்டனர்.


 






இதைத் தொடர்ந்து மூன்றாவது நடுவர் இதை பார்த்த அவுட் கொடுத்தார். நடுவரின் தீர்ப்பை ஏற்க மறுத்த மேக்ஸ்வேல் சோகமாக களத்திலிருந்து வெளியேறினார். இந்த ரன் அவுட் தொடர்பாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.


இந்தச் சூழலில் ரன் அவுட் தொடர்பாக ஐசிசியின் விதிமுறைகள் கூறுவது என்ன?


ஐசிசியின் விதிமுறைகளின் படி ரன் அவுட் முறையில் ஒரு வீரரை ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என்றால் பந்தை வைத்து ஸ்டெம்ப் அல்லது பெயில்ஸை எடுக்க வேண்டும். ஒரு வேளை இரண்டு பெயில்ஸும் ஏற்கெனவே தட்டிவிடப்பட்டிருந்தால் பந்தை கையில் வைத்து ஸ்டெம்பை களத்திலிருந்து வெளியே எடுக்க வேண்டும். அதுவே ஒரு பெயில்ஸ் மட்டும் ஸ்டெம்பிலிருந்து தட்டி விடப்பட்டிருந்தால் வழக்கமான முறையில் மற்றொரு பெயில்ஸை ஸ்டெம்பிலிருந்து பந்தை வைத்து தட்டிவிட வேண்டும். அப்படி செய்தால் அது ரன் அவுட் முறையாகும்.


 






இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்தி தன்னுடைய கையால் ஒரு பெயில்ஸை தட்டி விட்டிருந்தார். ஆனால் மற்றொரு பெயில்ஸ் ஸ்டெம்பின் மீது இருந்தது. ஆகவே அந்த பெயில்ஸை அக்‌ஷர் பட்டேல் வீசிய த்ரோ சிறப்பாக தட்டி விட்டது. இதன்காரணமாக மேக்ஸ்வேல் ரன் அவுட் கொடுக்கப்பட்டது. ஐசிசியின் விதியின் படி இந்த ரன் அவுட் சரியான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.