ஆசியக் கோப்பை 2023 போட்டிக்காக இந்திய அணி இலங்கைக்கு புறப்படுவதற்கு முன் பெங்களூருவின், ஆலூரில் நடந்த 5 நாள் முகாமின் கடைசி நாளில் விராட் கோலி பேட்ஸ்மேன், ஃபீல்டராக மட்டுமல்லாமல், அம்பயராகவும், பயிற்சியாளராகவும் மாறி நின்றது பலரைக் கவர்ந்துள்ளது.
இந்திய அணி பயிற்சி நிறைவு
கிரிக்கெட்டில் இருந்து ரிட்டயர் ஆன பிறகு அணிகளுக்கு பயிற்சியாளராக, போட்டிகளுக்கு அம்பயர் ஆக, வர்ணனையாளராக மாறுவது வழக்கம். அதற்கெல்லாம் பயிற்சி எடுப்பது போல் விராட் கோலி இப்போதே பயிற்சி ஆட்டத்தின் அம்பயர் ஆகவும், பயிற்சியாளராகவும் மாறி செயல்பட்டது பலரை கவர்ந்துள்ளது. பெங்களூரு, ஆலூரில் இந்திய அணியின் ஐந்து நாள் பயிற்சி முகாம் செவ்வாயன்று நிறைவடைந்தது. பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிரான ஆசியக் கோப்பை 2023-இன் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.எல்.ராகுலைத் தவிர, 17 பேர் கொண்ட இந்திய அணி இந்த புத்துணர்ச்சி மிக்க பயிற்சி அமர்வை முடித்து இலங்கை சென்றுள்ளது. ஊடகங்களுக்கு பெரிதாக அனுமதி இல்லாததால் உள்ளே நடந்தவை தெளிவாக யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருவழியாக பிசிசிஐ வெளியிட்ட வீடியோ மூலம் சில விஷயங்கள் தற்போது தெரிய வந்துள்ளது.
வீடியோவில் இந்திய அணி
ஜஸ்பிரித் பும்ரா முழு வேகத்தில் பந்துவீசுவது முதல் விராட் கோஹ்லி செய்த பல பாத்திரங்கள் வரை இந்தியாவிற்கான பல பாசிட்டிவ் அம்சங்கள் அடங்கிய ஒரு வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்கள் திறனை வெளிக்காட்டிய நேரத்தில், கேப்டன் ரோஹித் சர்மாவும் அதிரடியாக ஆடினார். ராகுல் 100 சதவீத உடற்தகுதியை அடையவில்லை என்றாலும், பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் நல்ல டச்சில் இருப்பதாக தெரிகிறது. இந்தியாவின் ஆசியக் கோப்பை 2023 தொடக்கப் போட்டிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முகாமில் 4-5 நாட்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறி முடித்தார்.
அம்பயரான கோலி
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 'ஃபாலோ தி ப்ளூஸ்' நிகழ்ச்சியில் பகிர்ந்த மற்றொரு வீடியோ, சில சுவாரஸ்யமான காட்சிகளைக் வெளியிட்டது. 10 நிமிட பயிற்சிக்காக பேட்டர்களுக்காக அமைக்கப்பட்ட மூன்று வலைகளில், ரோஹித் சர்மா முதலில் உள்ள வலைக்குள் களம் இறங்கினார். அதைத் தொடர்ந்து சுப்மான் கில், அடுத்ததாக ரவீந்திர ஜடேஜா. கடைசியாக இந்த கூட்டணியில் விராட் கோலியும் இணைந்தார். ஆனால் பேட்ஸ்மேனாக அல்ல, அம்பயராக. கில் முகமது ஷமியின் பந்து வீச்சை எதிர்கொண்டபோது, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு பின்னால் நின்று நடுவராக செயல்பட்டார்.
கில்லுக்கு பயிற்சியாளர்
கில்லின் பயிற்சி முடிந்த பின் அவரை அழைத்துச் சென்று நீண்ட உரையாடலில் ஈடுபட்டார். உரையாடல் நீண்டுகொண்டே போக, கோலி பேசுவதை கில் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார். சளைக்காமல் பேசிய கோலியின் தீவிரம் அவரது கண்களிலும், உடல் மொழியிலும் தெரிந்தது. 'கிங்' மற்றும் 'பிரின்ஸ்' இடையேயான உரையாடல் 10 நிமிடங்களுக்கு மேல் சென்றதாக கூறப்பட்டது. இப்படி பயிற்சி அமர்வில் இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் ஆக்டிவாக இருந்தது பல ரசிகர்களை நம்பிக்கை கொள்ளச் செய்துள்ளது. செப். 2-ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதைக் கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.