ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ளன.


ஆசியக்கோப்பை கிரிக்கெட்:


ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக நேற்று தொடங்கியது ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்ற்றுள்ளன. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


இலங்கை - வங்கதேசம் மோதல்:


தொடரின் முதல் போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து, இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ளன. இலங்கையில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும்,  ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.


தடுமாறும் இலங்கை:


தொடருக்கான அணியே வெறும் இரண்டு தினங்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்பட்டது. காரணம் அந்த அணியின் முக்கிய வீரர்களான வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, தில்ஷான் மதுஷங்கா மற்றும் லகிரு குமரா ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குஷால் பெரேரா முழுமையாக குணமடையாததால் அவரும் அணியில் இடம் பெறவில்லை. இதனால், போதிய அனுபவம் இல்லாத வீரர்களுடன் தான் இலங்கை அணி தொடரில் களமிறங்கியுள்ளது.


மீண்டு வருமா இலங்கை?


இந்தியாவுக்கு எதிராகவும், நியூசிலாந்திற்கு எதிராகவும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி , நடப்பாண்டில் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை மட்டுமே கைப்பற்றியது. அணியின் பேட்டிங் பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே, ஷாரித் அசலங்கா ஆகியோரை பெரிதும் சார்ந்து உள்ளது. பந்துவீச்சில் மகேஷ் தீக் ஷனா, கசன் ரஜிதாஆகிய இளம் வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. கேப்டன் தசன் ஷனகாவும் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேநேரம், போட்டி உள்ளூரில் நடைபெறுவது இலங்கை அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.


வங்கதேச அணி:


பொதுவாக உள்ளூரில் சிறப்பாக விளையாடும் வங்கதேச அணி, நடப்பாண்டில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் வங்கதேச அணியிலும் லிட்டன் தாஸ் உள்ளிட்ட சில நட்சத்திர வீரர்களும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். கேப்டன் ஷகிப் அல்ஹசன், முஸ்பிகுர் ரகிம், நஜ்முல் ஷான்டோ ஆகியோர் பேட்டிங்கிலும், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் டஸ்கின் அகமது ஆகியோர் பந்துவீச்சிலும் பலம் சேர்க்கக்கூடும். இதனால், இன்றைய போட்டியில் வெற்றிக்காக இலங்கை மற்றும் வங்கதேச அணியிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.