அனைத்து அணிகளும் 2023 உலகக் கோப்பைக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை போட்டியிலும், நியூசிலாந்து - இங்கிலாந்து டி20 போட்டிகளிலும் விளையாடி வருகின்றன. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியானது ஆகஸ்ட் 30ம் தேதியான நேற்று டர்பனில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று அசத்தியது. நேற்றைய ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் இந்திய வம்சாவளியான தன்வீர் சங்கா. இவர் தனது அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்களை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
போட்டி சுருக்கம்:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஸ் ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், டிம் டேவிட் 64 ரன்களும் எடுத்திருந்தனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக வில்லியம்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இதையடுத்து, 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 69 ரன்களுக்குள்ளையே 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரீஜா ஹென்ரிக்ஸ் மட்டும் அரைசதம் அடித்து போராடி கொண்டிருந்தார். இறுதியாக இவரும், தென்னாப்பிரிக்கா அணி 114 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த இரண்டாவது பந்திலேயே கடைசி விக்கெட் விழுந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 115 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் தன்வீர் சங்கா அதிகபட்சமாக 4 விக்கெட்களும், ஸ்டொய்னிஸ் 3 விக்கெட்களும், ஸ்பென்சன் ஜான்சன் 2 விக்கெட்களும் வீழ்த்தியிருந்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இந்திய வம்சாவளியினரான தன்வீர் சங்கா.
யார் இந்த தன்வீர் சங்கா..?
21 வயதான தன்வீர் சங்கா ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிறந்தவர். இவர் ஆஸ்திரேலியாவில் பிறந்து இருந்தாலும், தன்வீரின் தந்தை ஜோக சங்கா இந்தியாவை சேர்ந்தவர். இவர் பஞ்சாப் மாநிலம் ரஹிம்பூர் கிராமத்தில் பிறந்தவர். எனவே இவர் இந்திய வம்சாவளியினர். தன்வீரின் தந்தை கடந்த 1997 ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார், அதன் பிறகு அன்று முதல் அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அவ்வபோது தன்வீர் சங்காவும், அவரது அப்பாவுடன் இணைந்து இந்தியாவிற்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலர் காயம் அடைந்துள்ளது உலகக் கோப்பைக்கான போட்டியில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தன்வீர் சங்காவுக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர் நான்கு ஓவர்களில் வெறும் 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தன்வீர் தனது அறிமுக போட்டியிலேயே எய்டன் மார்க்ரம், டெவால்ட் ப்ரூவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் மார்கோ ஜான்சன் போன்ற வீரர்களை அவுட் செய்து அசத்தினார். தன்வீர் சங்கா வருகின்ற உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவின் 18 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம், இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பையில் தன்வீர் விளையாடுவதை காணலாம்.