பங்களாதேஷின் சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி ஸ்டேடியத்தில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதத்துடன் பல சாதனைகளை முறியடித்ததன் மூலம் இந்திய இடது கை வீரர், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்தவர், வேகமாக இரட்டை சதம் அடித்தவர் என்னும் பெருமைகளை பெற்றார்.


இஷான் கிஷன் இரட்டை சதம்


ஜிம்பாப்வேக்கு எதிராக 138 பந்துகளில் 20 ரன்களை எட்டிய மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த கிஷன், 126 பந்துகளில் தனது இரட்டை சதத்தை எட்டினார். 10 சிக்ஸர்கள் மற்றும் 24 பவுண்டரிகள் அடித்த இஷான் கிஷன், வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் ஓவரில் சிங்கிள் எடுத்து தனது வரலாற்று இரட்டை சதத்தை எடுத்தார்.






கொண்டாடிய ராகுல் டிராவிட்


இரட்டை சதத்தை அடித்த உடன் இஷான் கிஷன் சிங்கிள் ஓடி முடிப்பதற்கு முன்பே விராட் கோலி கொண்டாட ஆரம்பித்தார். இந்திய அணி டக்அவுட் அவரது இரட்டை சதத்தை கொண்டாடிய விதத்தில் கிஷானின் சாதனை அளவை அறிய முடியும். காயம் அடைந்த ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் கே.எல். ராகுல் ஆகியோர் இஷான் கிஷான் மீது நம்பிக்கை வைத்து களமிறக்கிய போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியத்தில் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதிலும் அமைதியான ராகுல் டிராவிட் எழுந்து குதித்து கொண்டாடியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. எல்லா நேரங்களிலும் கேஷுவலாக இருக்கும் டிராவிட் இரட்டை சதம் கடந்த பிறகு எப்படி கொண்டடினார் என்பதை காட்டும் விடியோ வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்: இந்த பட்டியலில் கோலியும் இல்லை..? தோனியும் இல்லை...? கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர் இவர்தான்!


ஐந்தாவது அதிகபட்சம்


24 வயதான இடது கை ஆட்டக்காரர் இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் ஒரு நாள் இன்னிங்ஸில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மற்ற இந்தியர்களாக இணைந்தார். டஸ்கின் அகமது அவரை ஒருவழியாக வீழ்த்த, இஷான் கிஷன் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்து பாகிஸ்தானின் ஃபகார் ஜமானுடன் ஐந்தாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இவர்களில் ரோஹித் ஷர்மா 264 ரன்களுடன் பல மைல் முன்னிலையில் உள்ளார். 



முறியடித்த சாதனைகள்


வங்கதேசத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கிரிக்கெட் வீரரின் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையும் இஷான் கிஷான் வசம் தான். அவர் ஷேன் வாட்சனின் சாதனையை முறியடித்துள்ளார். உள்ளபடியே ஒரு இந்திய வீரர் பங்களாதேஷில் அடித்த ரன்களிலும் அவர்தான் முதலிடம். இதற்கு முன் வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் 175 ரன்கள் எடுத்த வீரேந்திர சேவாக்கின் சாதனையே சிறந்ததாக இருந்தது. அணித்தலைவர் ரோஹித் ஷர்மா கட்டைவிரல் காயம் ஏற்பட்ட நிலையில் ஆட்டத்தில் களமிறங்க முடியாமல் போனதால் இஷான் கிஷன் களமிறங்கினார், அவர் உடல் தகுதியோடு இருந்திருந்தால் இந்த போட்டியில் இஷான் கிஷன் விளையாடியே இருக்க மாட்டார். ஆனால் இந்த ஆட்டத்தின் மூலம் அடுத்தடுத்த போட்டிகளில் அவரை பெஞ்சில் உக்கார வைப்பதையே கிட்டத்தட்ட சாத்தியமாற்றதாக மாற்றியுள்ளார்.