கிட்டத்தட்ட வருடம் முடியும் தருவாயில் இந்த ஆண்டு யார் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் என்ற பட்டியல் வெளியாகும். இந்த பட்டியலில் பெரும்பாலும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்களே இதில் அதிகம் இடம்பெறுவர். 


அந்த வகையில் இந்தியளவில் இந்த ஆண்டு கூகுளில் அதிக தேடப்பட்ட பிரபலங்களில் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், அதிகம் தேடப்பட்ட முதல் 10 நபர்களில் ஒரே ஒரு விளையாட்டு வீரர் மட்டும் இடம் பெற்றுள்ளார். அதுவும் கிரிக்கெட் வீரர். 


உங்கள் கணிப்புப்படி, அவர்கள் சச்சினோ, தோனியோ, கோலியோ என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. பிரவீன் தாம்பே என்ற பெயர் ஞாபகம் இருக்கிறதா..? அவரே இந்தாண்டு கூகுளில் தேடப்பட்ட ஒரே ஒரு விளையாட்டு வீரர். 


யார் இந்த பிரவீன் தாம்பே..? 


மூத்த லெக் ஸ்பின்னரான பிரவீன் தாம்பே. இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயோ அல்லது இந்திய கிரிக்கெட் அணியிலோ விளையாடவில்லை. இருப்பினும், இந்தாண்டு ஏப்ரல் மாதம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் ’யார் இந்த பிரவீன் தாம்பே..?’ என்ற படம் வெளியானது. பிரவீன் தாம்பே என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே நடித்தார். 


இதன் காரணமாக, 2022 ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய விளையாட்டு வீரர் பிரவீன் தாம்பே மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இந்தியாவின் அதிகம் தேடப்பட்ட 9வது நபராகவும் இடம்பெற்றுள்ளார். அதேபோல், ட்விட்டர் பக்கத்திலும் அதிக தேடப்பட்ட நபராகவும் பிரவீன் தாம்பே உள்ளார். 


கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில்தான் 41 வயதான பிரவீன் தாம்பே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார். மேலும், அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை எந்தவொரு முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் அறிமுகமான ஒரே வீரர் என்ற பெருமையை பிரவீன் தாம்பே பெற்றார். 


அறிமுகமான அடுத்த ஆண்டே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தாம்பே, எடுத்த ஹாட்ரிக் விக்கெட் எந்த ஒரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத ஒன்று. 






இந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர், மும்பை அணிக்காக தனது முதல் தர போட்டிகளில் அறிமுகமானார், அதை தொடர்ந்து பல வெளிநாடு லீக் தொடர்களிலும் பங்கேற்றார். 


கடந்த 2020 ம் ஆண்டு வெளிநாட்டு டி10 லீக் தொடரில் பிரவீன் தாம்பே, பிசிசிஐ அனுமதியில்லாமல் பங்கேற்றார். இதன் காரணமாக இந்திய கிரிக்கெட்டின் எந்த பார்மேட்டிலும் அவர் விளையாட தடை விதிக்கப்பட்டது. தற்போது இவர் எந்த அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தாரோ, அதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.