வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததற்கு பிறகு, டெஸ்ட் தொடரை கேஎல் ராகுல் வழிநடத்துவார் என பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் தொடரின் போது கையில் காயம் ஏற்பட்ட காரணத்திற்காக இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து, இந்திய டெஸ்ட் அணியை கேஎல் ராகுல் வழிநடத்துவார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோகித் சர்மாவிற்கு பதிலாக பெங்கால் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேச சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றிருந்த ஈஸ்வரன் இந்தியா ஏ அணியில் இடம் பிடித்திருந்தார். இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், இரண்டு சதங்கள் உள்பட 299 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இன்னும் காயத்திலிருந்து குணமடையவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து, இவர்களுக்கும் பதிலாக இந்திய ஏ அணியில் இடம்பிடித்த நவ்தீப் சைனி மற்றும் சவுரப் குமார், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட இடது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மும்பையில் சிறப்பு மருத்துவரை சந்தித்தார். இந்த காயத்திற்கு தகுந்த சிகிச்சை குறித்து அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது, மேலும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார்” என தெரிவித்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் அணி:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மான் கில், சேட்டேஷ்வர் புஜாரா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்