இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர் என மூன்று வகை கிரிக்கெட் தொடர்களையும் முடித்துவிட்டு தாய்நாடு திரும்பியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது. இதற்கு பின்னர், ரோகித், கோலி, ஜடேஜா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இந்தியா திரும்பினர். டி 20 போட்டியைப் பொறுத்தவரையில் இளம் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியைச் சந்தித்தது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் அதிரடியாக வென்றது. தொடரை நிர்ணாயிக்கும் 5வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இந்திய அணியின் அனுபவமில்லாத ஆட்டமும், நெருக்கடியை சமாளிக்க தெரியாததும் என கிரிக்கெட் உலகில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 


இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று வீரர்கள் சர்வதேச அளவில் அறிமுகமானதால் இளம் திறமைகளை சோதிக்க ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் அறிமுகமானார், திலக் வர்மா டி20 போட்டிகளில்  அறிமுகமானார், அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் மூன்று வடிவங்களிலும் அறிமுகமானார்.


யார் என்ன சொன்னாலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இளம் இந்திய அணி குறித்து சிறப்பாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “ சில தவறிகள் நடந்ததை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் டி20 தொடரின் தொடக்கத்தில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இருந்து மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து சிறப்பான முறையில் மீண்டு வந்துள்ளது. தொடரை வெல்லாதது ஏமாற்றம் அளித்தாலும், இளம் வீரர்களின் திறமையை சோதிப்பதற்கு கிடைத்த அருமையான தொடர். திலக் வர்மா மிகவும் நன்றாக விளையாடினார். குறிப்பாக நெருக்கடியான சூழலில் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். மிடில் ஆர்டரில் மிகவும் பொறுப்புடனும் அதே நேரத்தில் தேவைப்படும்போது அதிரடியாக விளையாடுவதும் அவசியமானது. திலக் வர்மா போன்ற இடது கை பேட்ஸ்மேன் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இருப்பது நமக்கு மிகவும் வலுவான காரணங்களில் ஒன்று. மேலும் திலக் வர்மா மிடில் ஆர்டரில் இருப்பதால் இந்திய அணியால் மற்ற அணிக்கு தாக்குதல் கொடுக்க முடியும். அதேபோல் திலக் வர்மாவை தேவைப்படும் தருணங்களில் இரண்டு முதல் மூன்று ஓவர்கள் வரை பந்து வீச வைக்க முடியும் என்பது தொடரின் தொடக்கத்தில் இருந்து எங்களுக்கு தெரிந்தாலும், அதனை ஒரு அணியாக செயல் படுத்தியதும் எங்களுக்கு மகிழ்ச்சிதான் எனக் கூறியுள்ளார். 


இந்திய தலைமை பயிற்சியாளர் டிராவிட், திலக் வர்மா குறித்து இது மாதிரி கூறியிறுப்பதால், திலக் வர்மா ஆசிய கோப்பைக்கான 50 ஓவர் தொடரில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படலாம் என பேச்சுகள் அடிபடுகிறது.