Asia Cup 2023: 2023ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்குகிறது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மிகவும் பெரிய அணியாக கருதப்படுவது இந்திய அணிதான். இந்திய அணி இதுவரை இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிடவில்லை. இந்நிலையில், இந்திய அணி இந்த வார இடையில் அல்லது இந்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏன் இன்னும் தனது அணியை அறிவிக்கவில்லை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணியை இன்னும் தேர்வு செய்யாமல் உள்ளதற்கு காரணம், இந்திய அணியின் முக்கிய வீரர்களான ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டுவிட்டததால், அவர்களுக்கு உடற்தகுதி செய்யப்பட்ட பின்னர் தேர்வுக்குழு இந்திய அணியை அறிவிக்கும் என கூறப்படுகிறது. 


அதாவது இந்திய அணியில் கே.எல். ராகுல் தனக்கு தொடையில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது மீண்டு வந்துள்ளார். அதேபோல், ஸ்ரேயஸ் ஐயர் தனக்கு கீழ் முதுகில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதிலிருந்து தற்போது முழுவதுமாக மீண்டு வந்துள்ளார். இந்நிலையில், இந்த இரு வீரர்களும் தற்போது பெங்களூரில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். இவர்கள் விளையாடியதை, கார் விபத்துக்குள்ளாகி மிகவும் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவர் மிகவும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கிரிக்கெட் விளையாடுவதை நேரடியாக பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இளம் இந்திய அணி குறித்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடருக்குப் பின்னர் கூறியதாவது, “ சில தவறிகள் நடந்ததை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் டி20 தொடரின் தொடக்கத்தில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இருந்து மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து சிறப்பான முறையில் மீண்டு வந்துள்ளது. தொடரை வெல்லாதது ஏமாற்றம் அளித்தாலும், இளம் வீரர்களின் திறமையை சோதிப்பதற்கு கிடைத்த அருமையான தொடர். திலக் வர்மா மிகவும் நன்றாக விளையாடினார். குறிப்பாக நெருக்கடியான சூழலில் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். மிடில் ஆர்டரில் மிகவும் பொறுப்புடனும் அதே நேரத்தில் தேவைப்படும்போது அதிரடியாக விளையாடுவதும் அவசியமானது. திலக் வர்மா போன்ற இடது கை பேட்ஸ்மேன் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இருப்பது நமக்கு மிகவும் வலுவான காரணங்களில் ஒன்று. மேலும் திலக் வர்மா மிடில் ஆர்டரில் இருப்பதால் இந்திய அணியால் மற்ற அணிக்கு தாக்குதல் கொடுக்க முடியும். அதேபோல் திலக் வர்மாவை தேவைப்படும் தருணங்களில் இரண்டு முதல் மூன்று ஓவர்கள் வரை பந்து வீச வைக்க முடியும் என்பது தொடரின் தொடக்கத்தில் இருந்து எங்களுக்கு தெரிந்தாலும், அதனை ஒரு அணியாக செயல் படுத்தியதும் எங்களுக்கு மகிழ்ச்சிதான் எனக் கூறியுள்ளார். 


இந்திய தலைமை பயிற்சியாளர் டிராவிட், திலக் வர்மா குறித்து இது மாதிரி கூறியிறுப்பதால், திலக் வர்மா ஆசிய கோப்பைக்கான 50 ஓவர் தொடரில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படலாம் என பேச்சுகள் அடிபடுகிறது.