Virender Sehwag: இந்திய அரசியல் களத்தில் தற்போது பெரும் பேசுபொருளாக உள்ள இரண்டு சொற்கள் என்றால் அது, சனாதனம் மற்றும் பாரத் என்ற சொற்கள்தான். இதில் சனாதனம் என்ற சொல் பெரும் பரபரப்பைக் கிளப்ப, திமுக இளைஞரணிச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியதுதான் காரணம். அதேபோல் பாரத் என்ற சொல் வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசு நாட்டின் பெயரை இந்தியா என்பதில் இருந்து பாரத் என மாற்றும் விவாதத்தை கொண்டு வருவதாக தகவல் வெளியானதையடுத்து, இந்தியா முழுவதும் இது பேசுபொருளானது.



 

இந்தியா தலைமைத் தாங்கி நடத்தும் இந்த ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு, வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கு முன்னதாகவே ஜி 20 நாடுகளைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வரவுள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என இல்லாமல் பார்த் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆளும் பாஜக அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்போகிறது என பலரும் உறுதியாகத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் எதிர்க்கட்சியினர் தங்களின் கூட்டணிக்குப் பெயரை இந்தியா (I.N.D.I.A) என பெயரிடப்பட்டுள்ளதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. 



 

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அதாவது செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி மதியம் வெளியிட்டது. இதற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக், ”இந்திய கிரிக்கெட் அணியின் பெயரை பாரத் கிரிக்கெட் அணி என குறிப்பிட வேண்டும் எனவும், இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் நமக்கு வழங்கியது, எனவே வரும் உலகக்கோப்பைத் தொடரில் நமது கிரிக்கெட் அணி பாரத் என பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்து விளையாட வேண்டும்” என டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பாரத் என்ற சொல் ஏற்படுத்தியுள்ள அரசியல் விவாதத்தினை ஷேவாக் மேலும் சூடாக்கியுள்ளார். 



மேலும் படிக்க