Team India ODI World Cup Squad 2023: உலகக்கோப்பை தொடருக்காக கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் கோலி, பும்ரா, கே. எல். ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிசிசிஐ அறிவிப்பு:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது இலங்கையில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதைதொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
ரோகித் சர்மா தலைமையிலான உலகக்கோப்பைக்கான அணியில் ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் , ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி அக்டோபர் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.
உலகக்கோப்பை தொடர்:
உலகக்கோப்பை ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் தொடரை நடத்தும் இந்தியாவோடு, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து என 10 அணிகள் பங்கேற்க உள்ளன. தொடரில் 45 லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 48 போட்டிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற உள்ளன. போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.
தயாராகும் அணிகள்:
உலகக்கோப்பை தொடர் தொடங்க சரியான இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள சூழலில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள், தங்களது உத்தேச வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்த பென் ஸ்டோக்ஸ், உலகக்கோப்பை தொடருக்காக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட வில்லியம்சன் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பெறுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதோடு, இந்த அணிகள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தான், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.