ஆசியக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம், அதிக அரைசதங்கள் விளாசிய இந்தியர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.


இந்தியா - நேபாளம்:


ஆசியக்கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தியாவின் முதல் லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற நேபாள அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் நேற்று இந்திய அணி களமிறங்கியது. 


இந்தியா அபார வெற்றி:


போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 48.2 ஓவர்களில் 230 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள், 20.1 ஓவரில் 147 ரன்களை சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை தேடி தந்தனர். இதில், கேப்டன் ரோகித் சர்மா 74 ரன்களையும், சுப்மன் கில் 67 ரன்களையும் குவித்தனர். நேற்றைய போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார்.


ரோகித் சர்மா சாதனை:


நேற்றைய அரைசதத்தின் மூலம் ஆசியக்கோப்பை தொடரில் 10 முறை அரைசதம் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக 9 அரைசதங்களுடன் சச்சின் உடன் முதல் இடத்தை பகிர்ந்து வந்த நிலையில், தற்போது சச்சினின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார். அதேநேரம், ஒட்டுமொத்தமாக 12 அரைசதம் விளாசி இலங்கை வீரர் சங்ககாரா முதலிடத்தில் நீடிக்கிறார். 


ஆசியக்கோப்பையில் அதிக அரைசதம் விளாசிய இந்தியர்கள்:


10 – ரோஹித் சர்மா*
9 – சச்சின் டெண்டுல்கர்
8 – விராட் கோலி


அதிக ரன் சேர்த்த இந்தியர்:


அதோடு, ஆசியக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர் என்ற கோலியின் சாதனையையும் ரோகித் சர்மா முறியடித்துள்ளார். நேற்றைய அரைசதத்தின் மூலம் ஆசியக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா ஆயிரத்து 101 ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலம் ஆசியக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த இந்தியர் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆசியக்கோப்பையில் அதிக ரன் சேர்த்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரோகித் பெற்றுள்ளார்.  1,220 ரன்களுடன் சங்ககாரா முதலிடத்தில் உள்ளார்.


மற்ற சாதனைகள்:



  • ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் 22 சிக்சர்களை விளாசியதன் மூலம், தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் ஷாஹித் அப்ரிடி 26 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், சனத் ஜெயசூர்யா 23 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்

  • நேபாளம் உடனான போட்டியில் 147 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோரின் தொடக்க கூட்டணி, ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் மூன்றாவது அதிகபட்சமாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு துபாயில் பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அடித்த 210 ரன்களே ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப் ஆகும்.