உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழ் தான் தற்போது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஜி20 உச்சி மாநாடு அழைப்பிதழ்:


அந்த அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசுதலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.


இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.  இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது.


வெளுத்து வாங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்:


இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.


அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!" என குறிப்பிட்டுள்ளார்.


இந்தியா பெயர் மாற்ற விவகாரம்:


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள I.N.D.I.A கூட்டணியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே நாட்டின் பெயர் பாரத் என்பதையே இனி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், இனி இந்தியா என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது, பாரத் என்றே நாட்டை அழைக்க வேண்டும் என கூறி இருந்தார்.


இதேபோன்று பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கூட, இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இந்த சூழலில்தான், வழக்கமாக குறிப்பிடுவதை போன்று அல்லாமல், ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனால், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை “பாரதம்” என மாற்றுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி வரலாற்றை திரித்து இந்தியாவை பிரிக்கலாம். அதனால் எங்களை தடுக்க முடியாது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.