கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஆசிய கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி கடுமையான பயிற்சிகளுக்கு மத்தியில் தனது பயிற்சி ஆட்டத்திலும் ஈடுபட்டது. இந்த பயிற்சி ஆட்டத்தில் சிலர் எதிர்பார்ப்பை விட சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், சிலர் மொத்தமாக ஏமாற்றம் அளித்ததையும் கான முடிந்தது. 50 ஓவர்களில் 368/3 ரன்கள் குவித்து இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தினர்.


ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் மற்றும் விராட் கோலி ஆகிய டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது பெரும்பாலான கண்கள் இருந்தன. மிடில் ஆர்டர் வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மீதும் கம்பேக் செய்வார்களா என்ற கேள்வியுடன் கவனம் இருந்தது.


ரோஹித் சர்மா – 0(4)


இந்திய அணியின் முதல் ஆளாக ஆட்டமிழந்த ரோஹித் சர்மாவிடம் இருந்து ஆரம்பிக்கலாம். அவர் டக் அவுட் ஆகி அதிர்ச்சியை அளித்துள்ளது பலருக்கு ஏமாற்றம் அளித்தது. ஆசிய கோப்பை போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுக்கு முன் அவரிடம் இருந்து இதுபோன்ற வெளிப்பாடுகள் வருவது இந்திய அணிக்கு வருத்தத்தை அளிக்கிறது. இருப்பினும், இந்த ஃபார்ம் தற்காலிகமானது என்றும், இதே போல போட்டிகளில் நீடிக்காது என்றும் பலர் நம்புகின்றனர்.



ஷுப்மன் கில் – 52(35)


அடுத்ததாக இளம் வீரர் ஷுப்மான் கில் 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். ரோஹித் ஆரம்பத்தில் வெளியேறினாலும், கில் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் வேகத்தை கூட்டினார். அவரது ஃபார்ம் மற்றும் அவர் காட்டும் நம்பிக்கை, அணியில் அவரது இடத்தை உறுதிப்படுத்தக்கூடும்.


தொடர்புடைய செய்திகள்: MS Dhoni: தங்கம்யா.. அந்த மனுஷன் தோனி! - பொங்கிய மத்திய பாதுகாப்பு படை அதிகாரி - வைரலாகும் கடிதம்..!


விராட் கோலி – 160(123)


இந்த நிகழ்வின் நட்சத்திரமாக செயல்பட்ட விராட் கோலி அனைவர் கவனத்தையும் திருப்பினார். 123 பந்துகளில் 160 ரன்களை குவித்த கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகிழ்வித்தார். அவரது இந்த இன்னிங்ஸ் ஒரு நாள் ஆட்டத்தை எவ்வாறு ஆடவேண்டும் என்பதற்கு ஒரு பாடமாக இந்திய வீரர்கள் பலருக்கும் அமைந்தது. எச்சரிக்கையுடன் மெதுவாக தொடங்கிய அவர், பின்னர் பல ஷாட்களை விளாசி பந்துவீச்சை திணறடித்தார். 






ஷ்ரேயாஸ் ஐயர் – 85*(71)


கில் ஆட்டமிழந்த பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 71 பந்துகளில் 85 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நவீன ODI பேட்ஸ்மேன்களில் ஒருநாள் போட்டி மிடில் ஆர்டரில் ஆட்டத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து தேர்ந்த வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபித்தார். அவரது இன்னிங்ஸ் பொறுமை மற்றும் ஆக்ரோஷத்தின் சரியான கலவையாக இருந்தது. ஸ்கோர்போர்டு தொடர்ந்து உயர்வதையும் உறுதி செய்து அணியை சாதுர்யமாக முன்னேற்றிக் கொண்டு செல்வதில் பெரும் நம்பிக்கையை அளிக்கிறார் ஷ்ரேயாஸ். 


கேஎல் ராகுல் – 55*(67)


விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர் இறங்கிய கே.எல்.ராகுலும் இந்திய அணிக்கு நம்பிக்கைக்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டமிழக்காமல், 67 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ரன் உயர பங்களித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் அவரது சக வீரர்களை விட குறைவாக இருந்தாலும், ஒரு ஃபினிஷராக கச்சிதமாக செயல்பட்டார்.


ஒட்டுமொத்தமாக இதில் ரோஹித்தின் அதிர்ச்சியூட்டும் டக் தவிர மற்ற அனைவரும் நம்பிக்கையை அதிகரித்துள்ளனர். கோலியின் அபார சதம் மற்றும் மிடில் ஆர்டரின் வலுவான ஆட்டம் வரை ஆட்டம் அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமான செய்திகளை வழங்கியுள்ளது. போட்டியின் தொடக்கத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், முக்கிய வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பது பலரை மகிழச்செய்துள்ளது.