இந்தியாவில் டி20 போட்டித் தொடர் நடைபெறுவது போல மற்ற நாடுகளிலும் வேறு, வேறு பெயர்களில் டி20 தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவற்றில் பிரபலமான ஒன்று கரிபீயன் பிரிமியர் லீக் ஆகும். வெஸ்ட் இண்டீசில் தற்போது நடைபெற்று வரும், இந்த தொடரில் நேற்று நடந்த 12வது போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும்  ரூதர்போர்டு தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அணியும் மோதின.


பூரண் அதிரடி:


இந்த போட்டியில் முதலில் பேட் செய்த செயின்ட் கிட்ஸ் அணி கேப்டன் ரூதர்போர்டின் அதிரடியால் 20 ஓவரில் 178 ரன்களை குவித்தது. அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்கள் விளாசினார். இதையடுத்து, 179 ரன்கள என்ற இலக்குடன் களமிறங்கிய டிரின்பாகோ அணிக்கு அதிர்ச்சி தொடக்கம் காத்திருந்தது.




தொடக்க வீரர் வால்டன் 6 ரன்னிலும், கப்தில் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க நிகோலஸ் பூரன், டக்கர் ஜோடி சேர்ந்தனர், டக்கர் நிதானமாக ஆட பூரண் அதிரடி காட்டினார். அதிரடி காட்டிய பூரண் 32 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் அவுட்டாக 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டக்கரும் 36 ரன்களுக்கு அவுட்டானார்.






அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள்:


கடைசி 35 பந்துகளில் 58 ரன்கள் டிரின்பாகோ வெற்றிக்கு தேவைப்பட்டது. களத்தில் பொல்லார்ட் – ரஸல் இருந்தனர். நவீத் வீசிய ஆட்டத்தின் 15 ஓவரின் 2 பந்தை பொல்லார்ட் சிக்ஸருக்கு விளாசினார். அந்த பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது. அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு விளாச, 4வது பந்தும் சிக்ஸருக்கு விளாசினார். ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த பிறகு நவீத் வீசிய 5வது பந்தையும் சிக்ஸருக்கு விளாசினார்.


பொல்லார்ட் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசி எதிரணியை நிலைகுலைய செய்தார். அவர் விளாசிய 4 சிக்ஸர்களுமே மைதானத்திற்கு வெளியே சென்றது. இதனால், 17.1 ஓவர்களிலே டிரின்பாகோ 180 ரன்களை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பொல்லார்டால் வெளுத்து வாங்கப்பட்ட நவீத் 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதும் எடுக்காமல் 50 ரன்களை வாரி வழங்கினார்.


பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரவுண்டில் மிரட்டக்கூடிய பொல்லார்ட் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபாரமாக ஆடியவர். பல நெருக்கடியான போட்டிகளில் தனி ஆளாக மும்பையை வெற்றி பெற வைத்தவர். கடந்தாண்டு முதல் மும்பை அணிக்காக ஆடுவதற்கு பதிலாக மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


களத்தில் வலுவான சிக்ஸர்களை விளாசும் பொல்லார்ட் மீண்டும் அசுர பேட்டிங்கை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.