இரண்டாவது டெஸ்ட் போட்டி:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இச்சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடினார். அதன்படி, 290 பந்துகள் களத்தில் நின்ற அவர் 209 ரன்களை குவித்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராவ்லி 78 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்தார். சிறப்பாக விளையாடி வந்த இவர் அக்ஷர் பட்டேல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். சாக் கிராவ்லியைத் தவிர்த்து மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்கள் தொடங்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரை அனைவரும் ஓரளவுக்கு தாக்குபிடித்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸரும் விளாசி 47 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 55.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டும் சேர்த்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
மகனுக்கு அர்ப்பணிக்கிறேன்:
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பறிய இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அதை தன்னுடைய மகன் அங்கத்துக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அப்போது பேசிய பும்ரா, “இதை என் மகனுக்கு அர்ப்பணிக்கிறேன். இது என் மகனின் முதல் சுற்றுப்பயணம். அவர் என்னுடன் தான் இருக்கிறார். அவரைப்பார்க்க ஆவலாக இருக்கிறேன். 6 விக்கெட்டுகளை எடுத்தது நன்றாக இருந்தது. நாள் முடிவில் அணியின் வெற்றியில் நம்முடைய பங்கு இருந்தால் அந்த உணர்வு சிறப்பானதாக இருக்கும்” என்று கூறினார். முன்னதாக கடந்த ஆண்டு கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் தன்னுடைய 100-வது விக்கெட்டையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs ENG 2nd Innings: மூன்றாவது நாள் ஆட்டம்...அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி!
மேலும் படிக்க: Viral Video: சிக்ஸர் பறக்க விட்டு சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்...வைரல் வீடியோ!