மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இந்த போட்டியில் கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மூன்று சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.



சச்சினின் மூன்று சாதனைகளும் முறியடிப்பு:


கொல்கத்தாவில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 326 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவர்கள் முடிவில் 83 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. 


இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரன் மிஷின் விராட் கோலி சதம் விளாசினார். அதன்படி, கடைசி வரை களத்தில் நின்ற அவர், 121 பந்துகளில் 10 பவுண்டரிகள் என 101 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் (49) அடித்த வீரர் என்ற கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்தார்.


இச்சூழலி, இன்று (நவம்பர் 15)  நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி 106 வது பந்தில் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.



உலகக் கோப்பையில் அதிக ரன்கள்:


சர்வதேச ஒரு நாள் உலகக் கோப்பையின் ஒரு தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்தார். தென்னாப்பிரிக்காவில் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 11 இன்னிங்ஸ்கள் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் குவித்திருந்தார்.


இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி  9 இன்னிங்ஸ்களில் 594 ரன்கள் குவித்து இருந்திருந்தார்.  இச்சூழலில் இன்று நடைபெற்றூ வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 80 வது ரன்னை கடந்ததன் மூலம் ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.


உலகக் கோப்பையில் அதிக அரைசதம் மேற்பட்ட ரன்கள்:


கடந்த நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக முறை 50 ரன்களை (தலா 7)  கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசனின் சாதனையை கோலி சமன் செய்தார்.


2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கரின் 7 முறை 50 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை பெற்றார். இந்த சாதனையை 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் ஷாகிப் சமன் செய்தார்.


இச்சூழலில்  விராட் கோலி இன்று நடைபெற்ற  போட்டியில் 50 ரன்களை கடந்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்தார். இப்படி விராட் கோலி இன்று நடைபெற்ற போட்டியில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மூன்று சாதனைகளையும் முறியடித்திருக்கிறர். தற்போது அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.