இந்தியாவில் கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன்படி, மும்பையில் இன்று நடைபெற வரும் முதல் அரையிறுதி போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. 


சாதனை நாயகன் 'கிங்' கோலி:


நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டி, ரசிகர்கள் மத்தியில் இதுவரை இல்லாத உச்சகட்ட எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. இதற்கு முக்கியமான காரணம் விராட் கோலி. லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49ஆவது ஒரு நாள் சதத்தை நிறைவு செய்து, சச்சின் சாதனையை சமன் செய்திருந்தார்.


நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 50ஆவது சதத்தை அடித்து சச்சின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 51 ரன்களில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இப்படிப்பட்ட சூழலில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 50ஆவது சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்ப்பு கிளம்பியது.


எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யு வகையில் சிறப்பாக ஆடிய விராட் கோலி, இன்றைய அரையிறுதி போட்டியில் 50ஆவது சதத்தை அடித்து அசத்தியுள்ளார். சதம் அடித்ததும் ஓடிவந்து சச்சினுக்கு சமர்பிக்கும் வகையில் விராட் கோலி சைகை காட்டினார். இதைப்பார்த்த சச்சின் எழுந்து நின்று கைதட்டி ரசிகர்களோடு ரசிகராக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 113 பந்துகளில் 117 ரன்கள் எடுத்த கோலி, டிம் சவுதி பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.


சச்சின் சாதனையை முறியடித்து மேலும் ஒரு மகுடம் சூடிய கோலி:


நடப்பு உலக கோப்பை முழுவதுமே சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி மேலும் ஒரு சாதனை படைத்திருந்தார். உலகக் கோப்பையின் ஒரு தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் கோலி இன்று படைத்தார். அதன்படி, இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 8 அரைசதங்களை விளாசி இருக்கிறார் விராட் கோலி.


இதற்கு முன்னதாக ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கர் இருந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அவர் 7 அரைசதங்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட் கோலி இன்று (நவம்பர் 15) முறியடித்து இருக்கிறார்.


சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிப்பாண்டிங் சாதனையை முறியடித்தார். பட்டியலில் 452 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.


இரண்டாவது இடத்தில், இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காரா 380 இன்னிங்ஸ்கள் விளையாடி 14234  ரன்களுடன் இருக்கிறார். 279 வது இன்னிங்ஸை விளையாடிய விராட் கோலி 13705 ரன்கள் குவித்து ரிக்கிப்பாண்டிங் ( 13704) சாதனையை முறியடித்தார்.