சர்வதேச ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிச் சுற்று இன்று (நவம்பர் 15) நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இச்சூழலில், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 13,705 ரன்களை கடந்ததன் மூலம் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி(Virat Kohli).
சாதனை மேல் சாதனை:
இந்த உலகக் கோப்பை தொடரில் பல்வேறு சாதனைகளை தினம் தினம் முறியடித்து வருகின்றனர் வீரர்கள். அந்த வகையில், சர்வதேச ஒரு நாள் தொடரில் அதிக சதம் (49) அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முன்னதாகவே சமன் செய்து விட்டார் விராட் கோலி. இதற்காக சச்சின் டெண்டுல்கரே கோலியை பாராட்டினார்.
மேலும், என்னுடைய 49 லிருந்து 50 ஐ எட்ட எனக்கு ஒரு வருடம் பிடித்தது. ஆனால், உங்களுக்கு அப்படியிருக்கப் போவதில்லை. 49 லிருந்து 50 ஐ இன்னும் சில நாட்களில் நீங்கள் எட்டி என்னுடைய சாதனையை முறியடித்துவிடுவீர்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இதனிடையே, சச்சின் டெண்டுல்கரின் சொல்படியே அவரது சாதனையை முறியடிக்கும் நோக்கில் விளையாடி வரும் விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிப்பாண்டிங் சாதனையை முறியடித்து இருக்கிறார்.
அதன்படி, இந்த பட்டியலில் 452 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில், இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காரா 380 இன்னிங்ஸ்கள் விளையாடி 14234 ரன்களுடன் இருக்கிறார்.
இதனிடயே, 279 வது இன்னிங்ஸ் விளையாடி வரும் விராட் கோலி 13705 ரன்கள் குவித்து ரிக்கிப்பாண்டிங் ( 13704) சாதனையை முறியடித்தார்.
ஒரு தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர்:
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பையின் ஒரு தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார். அதன்படி, இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 8 அரைசதங்களை விளாசி இருக்கிறார் விராட் கோலி. இதற்கு முன்னதாக ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கர் இருந்தார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அவர் 7 அரைசதங்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன் சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட் கோலி இன்று (நவம்பர் 15) முறியடித்து இருக்கிறார்.
மேலும் படிக்க: Abdul Razzaq: ”வாய் தவறி பேசிட்டேன், மன்னிச்சிருங்க” - ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்
மேலும் படிக்க: Shubman Gill: திணறும் நியூசிலாந்து: அதிரடியாக அரைசதம் விளாசி தசைப்பிடிப்பால் வெளியேறிய சுப்மன் கில்!