நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, டாஸ் போடுவதற்கு முன்பு வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோகித் சர்மாவிற்கு வலது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. 


அதன் தொடர்ச்சியாக களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்தநிலையில், இந்திய நேரப்படி ஓவல் மைதானத்தில் நேற்று மதியம் 2.30 மணியளவில் ரோகித் சர்மா டாஸ் போடுவதற்காக பெவிலியன் வழியாக மைதானத்திற்குள் வந்தார். அப்போது, பெவிலியனில் இருந்த ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவை வெறுப்பு ஏற்றும் வகையில், “ கிங் கோலி நீங்கள்தான் எப்போது எனது கேப்டன்” என வாசகத்துடன் கூடிய பேனரை காமித்து அவருடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால், சற்று சமநிலையை இழந்த ரோகித், பின்பு அதனை புறகணித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். 


ரோகித் சர்மாவும் - டெஸ்ட் கேப்டன்ஷியும்: 


ஏறக்குறைய 21 மாதங்களுக்கு பிறகு தனது முதல் வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் ரோகித் சர்மா. ரோகித்தின் கடைசி வெளிநாட்டு டெஸ்ட் போட்டியும் இந்த மைதானத்தில்தான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா மற்றும் காயங்கள் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச டெஸ்ட் சுற்றுப்பயணங்களில் இருந்து ரோகித் சர்மா விலகினார். 


அதேபோல், டெஸ்ட் வடிவத்தில் ஏழாவது முறையாக இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் ரோகித் சர்மா. மேலும், ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் வெளிநாட்டு மண்ணில் விளையாடும் முதல் டெஸ்ட் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


கோலி மொத்தமுள்ள 68 டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில், 36 வெளிநாட்டு போட்டிகள். இதில், இங்கிலாந்து மண்ணில் 9 போட்டிகளில் தலைமை தாங்கி 3ல் வெற்றி கண்டுள்ளார். 


முதல் நாள் ஆட்டநேர முடிவு: 


முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் கவாஜா தொடங்கினர். சிறப்பாக பந்து வீசிய மிகமது சிராஜ் கவாஜாவை ரன்  ஏதும் எடுக்க விடாமல் டக் அவுட் செய்தார். அதன்பின்னர் சிறப்பாக ஆடி வந்த வார்னர் அரைசதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்னில் இருந்த போது தனது விக்கெட்டை ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன் பின்னர் இந்திய பந்து வீச்சுக்கு சவால் கொடுத்து வந்த லபுசேன் முகமது ஷமியிடம் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது. 


தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி ஆஸ்திரேலிய அணியை மீட்டெடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஹெட் சதம் விளாசி அசத்த, ஸ்மித் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தார். இந்திய அணிக்கு எதிரான முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.