மதுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விரைவில் நடைபெற உள்ளது என உசிலம்பட்டியில் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
 
மினி விளையாட்டு அரங்கம்
 
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு அரங்கம் என்ற வகையில் உசிலம்பட்டி சீமானூத்து பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் மூர்த்தி..,”எல்லோருக்கும் எல்லாம் என்ற உயர்ந்த நோக்கோடு தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவரேனும் அரசு நலத்திட்டத்தால் பயன்பட்டிருக்க வேண்டும் என்ற, நோக்கத்துடன் முதலமைச்சர் மாவட்டம், மாவட்டமாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கிறார். அதோடு அரசு பணிகளையும் கட்சிப் பணிகளையும் இரு கண்களாக கருதி செயல்பட்டு வருகிறார்.
 
மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் தொடங்கியது
 
அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்ற, நோக்கத்துடன் தொகுதிதோறும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்று, மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை இன்று தொடங்கி வைத்துள்ளோம். சமீபத்தில் முதல்வர் கலந்து கொண்ட பொது குழு மற்றும் ரோட் சோ நிகழ்ச்சி எந்த அளவிற்கு வெற்றிகரமாக அமைந்ததோ, அதே அளவிற்கு நவம்பர், டிசம்பர் மாதம் இறுதியில் முதல்வர் கலந்து கொள்ளக்கூடிய மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற வேண்டும்.
 
தொடரும் நலத்திட்டம் - அமைச்சர் பெருமிதம்
 
அதற்காக அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அந்த விழாவில் தகுதி உள்ள நபருக்கு பட்டாக்கள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் கூட நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வாகனங்கள் வழங்கி செயல்படுத்தினோம். தொடர்ந்து அவர்களுக்கான உதவிகளும் செய்யப்படும். இப்படி அனைவருக்கும் ஆன அரசாக திகழ நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருந்தாலும் கூட பணிகளை விரைவு படுத்தி அனைவரும் செயலாற்ற வேண்டும்” என்றார்.