விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டித் தொடரில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணி ஜெகதீசனின் அபார இரட்டை சதம் மற்றும் சுதர்சனின் அபார சதத்தின் உதவியால் 506 ரன்களை குவித்தது.




இதையடுத்து, 507 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் நீலம் ஓபி 4 ரன்னும், ரோகன்ஷர்மா 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மதன்பால், டெக்கி டோரியா சிறிது நேரம் களத்தில் இருந்தனர். ஆனால், அவர்களும் சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் கம்ஷா யங்போ கேப்டன் 17 ரன்களில் வெளியேறினார்.






அடுத்தடுத்து வந்த வீரர்கள் டக் அவுட்டாகியும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இதனால், அருணாச்சல பிரதேச அணி 28.4 ஓவர்களில்71 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அருணாச்சல பிரதேச அணியில் 4 பேர் டக் அவுட்டாகினர். இதனால், தமிழ்நாடு அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.




முதல் தர ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை தமிழ்நாடு அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு 1990ம் ஆண்டு சோமர்செட் அணி டேவான் அணியை 346 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இதுவரை முதல் தர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தது. தமிழ்நாடு அணி தற்போது 22 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது.


முன்னதாக, தமிழ்நாடு அணிக்காக களமிறங்கிய ஜெகதீசன் அபாரமாக ஆடி 277 ரன்கள் விளாசினார். சாய் சுதர்சன் 154 ரன்கள் விளாசினர். அவர்களது பேட்டிங்கால் தமிழ்நாடு அணி 506 ரன்களை விளாசி அசத்தியது. இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜெகதீசன் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.


மேலும் படிக்க :Vijay Hazare Trophy : ஒரே தொடர்.. பல்வேறு ரெக்கார்டுகளை தன்வசமாக்கிய ஜெகதீசன்.. அப்படி என்ன சாதனை தெரியுமா..?


மேலும் படிக்க : Vijay Hazare Trophy : ஒரே தொடர்.. பல்வேறு ரெக்கார்டுகளை தன்வசமாக்கிய ஜெகதீசன்.. அப்படி என்ன சாதனை தெரியுமா..?