ஐபிஎல் போட்டி மூலம் அனைவரின் பார்வைக்கு வந்தவர் சூர்யகுமார் யாதவ். மும்மை அணிக்காக அதிரடியாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தவர் சூர்யகுமார் யாதவ். ஒவ்வொரு முறையும் இந்திய அணி அறிவிக்கப்படும் போது இவரது பெயர் இடம் பெறுமா என இவரோடு சேர்ந்து இவரது ரசிகர்கள் குடும்பத்தினர் காத்திருந்ததும் ஒரு காலம்.
2020 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு இவருக்கு அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. அதன் பின்னர் 2021ல் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டபிறகு சூர்யகுமாருக்கு அணியில் இடம் கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி தனக்கான இடத்தை இந்திய அணியில் நிலைநிறுத்திக் கொண்டார். அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தால் அணியை வெற்றிபெறச் செய்துள்ளார். இதனால் 2022ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை அணியிலும் இடம் பிடித்தார்.
இந்த உலகக் கோப்பை இவருக்கு முதல் உலகக் கோப்பை போட்டியாகும். இந்த தொடரில் இவர் மொத்தம் மூன்று அரைசதங்கள் உட்பட 239 ரன்கள் விளாசியுள்ளார். மேலும் இந்த தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் வெற்றிபெற்றூ அரையிறுதிக்கு முன்னேற விராட்கோலியுடன் இவரது பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. இதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 189.68, ஆவரேஜ் ஸ்கோர் 59.75. இதனால் ஐசிசி கனவு அணியிலும் இவர் இடம் பெற்றார்.
தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடிவரும் இவர் நேற்று நடந்த 2வது டி20ன் போட்டியில் 51 பந்துகளில் 111 ரன்கள் விளாசியுள்ளார். அவர் மொத்தம் 11 ஃபோர், 7 சிக்ஸர் என அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இந்த சதம் சர்வதேச டி20 போட்டியில் சூர்யகுமார் யாதாவின் இரண்டாவது சதமாகும். இதற்கு முன்னர் இவர் இதே ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 55 பதுகளில் 117 ரன்கள் விளாசினார். அதில் 14 ஃபோர்கள், 6 சிக்ஸர்கள் என பறக்கவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இதுவரை 39 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 12 அரைசதங்கள் உட்பட மொத்தம் 1395 ரன்கள் விளாசியுள்ளார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி அணி நிர்வாகம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக அளவில் தனக்கான தனி இடத்தினை பிடித்துள்ளார். மிகவும் பெரும் கனவுடன் தன்னை ஆளாக்கி வந்த சூர்யகுமார் இன்றைக்கு உலக கிரிக்கெட் வட்டாரமே தலை நிமிர்ந்து பார்க்கும் SKYஆக மிளிர்கிறார் என்பதில் ஐயம் இருக்க முடியாது.