பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில் தமிழ்நாடு அணி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 500 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றது.


விஜய் ஹசாரே டிராபியில் எலைட் குரூப் சி போட்டியின் 6வது சுற்றில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி இன்று நேருக்குநேர் சந்தித்தது. முதலில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர். 


இருவரும் அருணாச்சல பிரதேச அணிகளின் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டு சதம் கண்டனர். முதல் விக்கெட்டு பார்ட்னர்ஷிப் இந்த ஜோடி 416 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சர்வதேச மற்றும் லிஸ்ட் ஏ வடிவத்தில் 400 ரன்கள் குவித்த முதல் ஜோடி என்ற பெருமையை ஜெகதீசன் - சுதர்சன் படைத்தனர். இதற்கு முன் 2015ல் ஜிம்பாப்வேக்கு எதிராக கிறிஸ் கெயில் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் இரண்டாவது விக்கெட்டுக்கு 372 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.


சாய் சுதர்சன் 102 பந்துகளில் 154 ரன்கள் குவித்து வெளியேறினார். அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் குவித்து வெளியேற, அடுத்து களமிறங்கிய  பாபா பிரதர்ஸ் தலா 31 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 50 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. 


அருணாச்சலத்திற்கு எதிரான இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுக்கு 506 ரன் எடுத்ததன் ஆண்கள்  லிஸ்ட் ஏ வடிவத்தில் 500க்கும் அதிகமான ரன்களை எடுத்த முதல் அணி என்ற பெருமையை தமிழ்நாடு படைத்தது. இதற்கு முன் இந்த ஆண்டு தொடக்கத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.


ஜெகதீசன் : 


லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் படைத்துள்ளார். இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார, தென்னாப்பிரிக்காவின் அல்விரோ பீட்டர்சன் மற்றும் கர்நாடக தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் இதற்கு முன்னதாக 50 ஓவர் வடிவத்தில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்துள்ளனர். 


விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்ற ஒரே ஆண்டியில் அதிக சதம் அடித்தவர் பட்டியலில் இருந்த விராட் கோலி, பிருத்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரையும் கடந்தார் ஜெகதீசன். கோலி 2008-09 சீசனில் நான்கு சதங்களை அடித்தார். 7 போட்டிகளில் விளையாடிய கோலி 89 சராசரியுடன் 534 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் ஏற்கனவே தனது 6வது போட்டியில் 799 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.