12 போட்டிகளில் 70 என்ற சராசரியில் ஏழு அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 700 ரன்கள்… இது விராட் கோலி நீண்ட இடைவெளிக்கு பின் ஃபார்முக்கு திரும்பிய பின் இந்தியாவுக்காக குவித்த ரன் எண்ணிக்கை. ஆசியக்கோப்பையில் அவர் 276 ரன்களுடன் போட்டியில் இரண்டாவது அதிக ஸ்கோர் எடுத்தவர் ஆனார். முகமது ரிஸ்வான் 281 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சராசரி 92 வைத்திருந்தார் என்பதுதான் சிறப்பு. அதன் பின் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையிலும் கோஹ்லி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


296 ரன்கள் குவித்து தரவரிசையில் முன்னிலை வகித்த நிலையில், இதில் சராசரி 98.66 ஆக உயர்ந்தது. நான்கு அரை சதங்கள் உட்பட, மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து போட்டியை வெல்லவும் காரணமாக இருந்தார். அதற்கு காரணம், இதே மனிதர், சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் பேட்டிங் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்ததுதான். 



டி20 போட்டிகளில் இருந்து விலக்கப்படும் மூத்த வீரர்கள்


அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதால், இந்தியாவின் எதிர்கால டி20 திட்டங்களில் கோஹ்லி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் இருக்க மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இளம் இரத்தங்களுக்கான நேரம் என்று பலரது கருதும் உள்ளது. உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா எட்டு டி20 போட்டிகளில் விளையாடியது, அதில் எதிலுமே கோலி இடம் பெறவில்லை என்பது இந்த ஊகங்களுக்கு வலு சேர்த்தது. வீரர்களுடன் வெளிப்படைத்தன்மை என்பது இந்திய கிரிக்கெட்டின் வழமை அல்ல. வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட் மற்றும் கபில் தேவ் கூட அதனை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் கோஹ்லி விஷயத்தில், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பிசிசிஐ மற்றும் அதன் தேர்வாளர்களிடமிருந்து சில தெளிவுகள் வேண்டுமென விரும்புகிறார்.


தொடர்புடைய செய்திகள்: LSG vs CSK IPL 2023: லக்னோவில் ராசியில்லாத லக்னோ அணி.. வெற்றியை வசமாக்குமா சென்னை..? யாருக்கு வாய்ப்பு?


எதை செய்தாலும் தெரிவிக்க வேண்டும்


"தேர்வாளர்களின் மனதில் என்ன இருக்கிறது, அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் நாம் வெல்லவில்லை என்றால், எப்போதும் அழுத்தம் இருக்கும். மூத்த வீரர்கள்தான் அதைச் சுமக்கிறார்கள். பெரிய நட்சத்திரங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால், நாமும் இளைஞர்களை தேர்வு செய்யலாம். அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்," என்று கூறினார். ஆனால் விராட்டைப் பொறுத்த வரையில், ஃபார்ம் அடிப்படையில் அவரை ஓரங்கட்ட முடியாது என்று நினைப்பதாக ஐபிஎல் 2023 இன் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஹர்பஜன் கூறினார். "அவரிடம் பேசி, ஒரு இளம் அணியை உருவாக்குகிறோம் என்பதைத் தெரிவிக்கலாம். எதைச்செய்தாலும், அது மூத்த வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். ஒரு முடிவு எடுக்கப்பட்ட பிறகு அவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாது," என்றார். 



விராட் கோலிக்கு அது நடக்கக் கூடாது


உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில் கோலியின் தற்போதைய அற்புதமான ஃபார்ம் காரணமாக அவரை அணியில் இருந்த விலக்க முடியாது. ஐபிஎல்லில் கூட ஒன்பது ஆட்டங்களில் ஐந்து அரைசதங்கள் உட்பட 364 ரன்களுடன் - கோஹ்லி மீண்டும் உச்ச நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால்தான் பிசிசிஐ தங்கள் முன்னாள் கேப்டனிடம் கொஞ்சம் மரியாதை காட்ட வேண்டும் என்று ஹர்பஜன் நம்புகிறார். தேர்வாளர்கள் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும், அவரிடம் தெரிவித்துவிட வேண்டும் என்கிறார். "நாங்கள் எல்லாம் சொல்லாமலே முதலில் ஓரங்கட்டப்பட்டோம், பின்னர் செய்தித்தாள்கள் மூலம்தான் தெரிந்துகொண்டோம். கோஹ்லிக்கு இது நடக்கக்கூடாது. ஒரு வீரருக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அது ரோஹித், விராட் அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி. தகவல் தொடர்புதான் முக்கியம். சரியாக வழிநடத்தினால், அது உருவாக்கப்படும். வீரர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான உறவு வேண்டும். ஏனெனில் யாரேனும் ஓரங்கட்டப்பட்டு, பின்னர் அதைப் பற்றி நேரடியாக தெரிவிக்கப்படாமல் இருந்தால், சங்கடமான சூழலை உருவாக்கும்," என்று ஹர்பஜன் கூறினார்.