ஐபிஎல் 16வது சீசனின் 46வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. 


லக்னோ அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 127 ரன்களை துரத்திய லக்னோ அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பில் நவீன் உல் ஹக் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், கிருஷ்ணப்ப கவுதம் மட்டுமே அதிகபட்சமாக 20 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தார். 


சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. சென்னை அணி தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால், இன்றைய போட்டியில் கட்டாய வெற்றியுடன் களமிறங்கும். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் டெவான் கான்வே மற்றொரு அரைசதம் அடித்தார், இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. அதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்களின் கூட்டு முயற்சியால், கடைசி பந்தில் வெற்றி பெற்றனர். 


LSG vs CSK பிட்ச் அறிக்கை:


லக்னோ மைதானத்தில் இதுவரை நடந்த 5 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 4ல் வெற்றி பெற்றுள்ளது. லக்னோ இதுவரை தங்களது சொந்த மைதானத்தில் 2 முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பிட்சானது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால், ரன் அடிக்க இரு அணி வீரர்களும் திணறுவார்கள்.


இரு அணிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்: 


டெவான் கான்வே - 414 ரன்கள் (9 போட்டிகள்)
ருதுராஜ் கெய்க்வாட்-354 ரன்கள் (9 போட்டிகள்)
கைல் மேயர்ஸ் - 297 ரன்கள் (9 போட்டிகள்)
கேஎல் ராகுல் - 274 ரன்கள் (9 போட்டிகள்)
சிவம் துபே - 264 ரன்கள் (9 போட்டிகள்)


LSG vs CSK கணிக்கப்பட்ட அணி வீரர்கள்: 


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG):
கேஎல் ராகுல் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், யாஷ் தாக்கூர், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா, நவீன்-உல்-ஹக்


சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே):
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அம்பதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா/மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா


இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் வீரர்கள் யார்? 


டெவான் கான்வே: 


நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் டெவான் கான்வே மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இவர் ஒன்பது இன்னிங்ஸ்களில் 59.14 சராசரி 144.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 414 ரன்களைக் குவித்துள்ளார். இந்த சீசனில் ஐந்து அரை சதங்களை அடித்துள்ளார். மேலும், முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


துஷார் தேஷ்பாண்டே: 


27 வயதாக துஷார் தேஷ்பாண்டே இதுவரை சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பந்துவீசியுள்ளார். இதுவரை இவர் 9 போட்டிகளில் விளையாடி  21.70 சராசரியுடன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். கடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


வெற்றி யாருக்கு? 


வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி வெற்றிபெற வாய்ப்புள்ளது.