ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் சீசன்:
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 16வது ஐபிஎல் தொடரில் இதுவரை 45 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த போட்டியின் நேரலையை ஜியோ சினிமா செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும் கண்டுகளிக்கலாம்.
புள்ளிப்பட்டியல்:
நடப்பு சீசனில் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. அதே சமயம் மும்பை அணி 8 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி, தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது. மேலும் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இரு அணிகளும் இனி வரும் போட்டிகளில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்:
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இருந்து இரு அணிகளும் விளையாடி வருகிறது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 15 வெற்றிகளைப் பெற்று சமமாக உள்ளன. கடைசியாக கடந்த 6 மோதல்கலில் பஞ்சாப் கிங்ஸ் அணி நான்கு முறை வென்றுள்ளது. நடப்பு சீசனில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியிருந்தது. மேலும் மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இதற்கு முன்பு 8 முறை மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி உள்ளது. இரு அணிகளும் தலா 4 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் கடைசியாக 2019 ஆம் ஆண்டு விளையாடி இருந்தது.
மைதானம் எப்படி?
இந்த சீசனில் பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அந்த அணி இரண்டு முறை 190 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான முந்தைய போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் 458 ரன்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக டாஸ் வென்ற மும்பை அணியும், இன்று பந்துவீச்சையே தேர்வு செய்துள்ளது.