இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை சற்று மோசமான துவக்கத்தை செய்தது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடமும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியிடமும் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாகவே இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி தெரிவித்திருந்தார்.
டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு புதிய டி20 கேப்டனாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் நியமிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் நமீபியா அணிக்கு எதிரான இன்றைய டி20 உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி கேப்டனாக கடைசி முறை டாஸிற்கு வந்தார். அப்போது டாஸிற்கு பிறகு அவரிடம் இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர்,”இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மா மாதிரியான வீரர்களிடம் இருக்கும்போது நன்றாக செயல்படும். என்னுடைய பணிக்கு பிறகு அடுத்து வருபவர்கள் அணியை வழிநடத்த வேண்டும். ஏற்கெனவே துணை கேப்டனாக ரோகித் சர்மா அணியின் செயல்பாடுகளை நன்கு கவனித்து வருகிறார். இந்திய அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது பெரிய கௌரவம். அதை நான் சிறப்பாக செய்தேன். என்னுடைய அணி சிறப்பாக விளையாடியது” எனக் கூறினார்.
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட்டும் கேப்டன் பொறுப்பு குறித்து கூறியதாக தகவல் வெளியானது. அதில் அவரிடம் இந்திய அணியின் அடுத்த கேப்டன் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு டிராவிட்,”ரோகித் சர்மா கேப்டனாகவும், கே.எல்.ராகுல் துணை கேப்டனாக இருப்பார்கள்” எனத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்திய அணி அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. அதேபோல் 2023ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. எனவே அதற்குள் இந்திய ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அணிகளுக்கு ஒரே கேப்டன் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவார் என்று கருதப்படுகிறது. விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்வார் என்று கூறப்படுகிறது.
இது அனைத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும் நியூசிலாந்து தொடருக்கு ரோகித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: கோலிக்கு பின்பு டி20 கேப்டனாக இவர் தான் வரவேண்டும்- அதிரடியாக கூறிய நெஹ்ரா !