டி-20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சூப்பர் 12 சுற்று போட்டிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளரான இந்தியாவைச் சேர்ந்த மோகன் சிங் என்பவர், திடீரென காலமானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயது மோகன் சிங், இந்தியாவில் சில ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு வேலை நிமித்தமாக கடந்த 2000-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளார். 15ஆண்டுகளுக்கும் மேலாக அபுதாபி கிரிக்கெட் அமைப்பில் பணியாற்றி வந்த அவர், நவம்பர் 7-ம் தேதி மாலைஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் போட்டி தொடங்குவதற்கு முன்பு தன்னுடைய அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 



போட்டி நடைபெற்ற நாளன்று காலை மைதானத்தை ஆய்வு செய்த அவர், மாலை வேளையில் இப்படி ஒரு முடிவை எடுத்தது எதிர்ப்பாராதது என்றும், வருத்தமளிப்பதாகவும் அபுதாபி கிரிக்கெட் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகன் சிங்கிற்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவரது இறப்பை கேட்டு, இருவரும் அபுதாபிக்கு விரைந்துள்ளனர். மோகன் சிங்கின் மறைவிற்கு ஐசிசி, அபுதாபி கிரிக்கெட் அமைப்பு இரங்கலை தெரிவித்துள்ளது.


டி-20 உலகக்கோப்பை தொடங்கியது முதல் பரபரப்பாக போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. டி-20 உலகக்கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியும் அமீரகத்தில் நடந்ததால், கடந்த மூன்று மாதங்களாகவே அபுதாபி கிரிக்கெட் மைதான பணியாளர்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்திருக்கும். இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக மோகன் சிங் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால்தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது. எனினும் அவரது இறப்பிற்கு சரியான காரணம் என்ன என்பது தெரியவில்லை. மோகன் சிங்கின் இறப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அபுதாபி கிரிக்கெட் அமைப்பு தெரிவித்துள்ளது. 


மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:


Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours)


State suicide prevention helpline – 104 (24 hours),


iCall Pychosocial helpline – 022-25521111


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண