இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை சற்று மோசமான துவக்கத்தை செய்தது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடமும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியிடமும் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாகவே இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். 


டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு புதிய டி20 கேப்டனாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் நியமிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழலில் விராட் கோலிக்கு அடுத்து புதிய கேப்டனாக ஒருவரை நியமிக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, “இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா தவிர கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ரிஷப் பண்ட் பல்வேறு நாடுகளின் தொடர்களில் இருந்திருந்தாலும் தற்போது தான் அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறார். அதேபோல் கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டிகளில் மாயங்க் அகர்வாலின் காயத்திற்கு பிறகு தான் இடம்பிடித்து வருகிறார். ஆகவே என்னை பொருத்தவரை ஜஸ்பிரீத் பும்ரா தான் இந்திய அணியின் கேப்டனாக வரவேண்டும். அவர் ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் இடம்பிடித்து வருகிறார். அத்துடன் அவருக்கு அணியை வழிநடத்தும் திறமையும் உள்ளது. 




பந்துவீச்சாளர்கள் அணியை வழிநடத்த கூடாது என்பது போன்ற எந்தவித விதியும் இல்லை. அப்படி இருக்கும் போது அவர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும்” என்று ஒரு விவாத நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.  இவ்வாறு பலரும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். எனினும் தற்போது வரை பிசிசிஐ இந்தியாவின் புதிய கேப்டன் தொடர்பான அறிவிப்பை செய்யவில்லை. 


அடுத்த வாரம் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. அப்போது இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தத் தொடர் முதல் இந்திய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தனது பணியை தொடங்கிறார். ஆகவே இந்தத் தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: நஜிபுல்லா அரைசதம்... 125 அடித்தால் அரையிறுதியில் நியூசி!