ஐசிசி உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இச்சூழலில், 9-வது உலகக்கோப்பை டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.  அதன்படி, 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.


20 அணிகள் பங்கேற்கும்:


ஐசிசி உலகக் கோப்பை ஒரு நாள் தொடருக்கு மொத்தம் 10 அணிகள் தகுதி பெற்றன. அதுபோல், ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்குபெற உள்ளன.


தகுதி பெற்ற 18 அணிகள்:


இதுவரை உலகக் கோப்பை டி20 தொடரில் பங்குபெறுவதற்கு மொத்தம் 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,  நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, பிஎன்ஜி (Papua New Guinea)கனடா, நேபாளம் மற்றும்  ஓமன் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.


முதல் முறையாக அமெரிக்காவில்:


இந்த உலகக் கோப்பை டி20 தொடர் முதல் முறையாக அமெரிக்காவில் நடைபெற உள்ளதால் இந்த தொடர் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறும் என்ற தகவலை கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐசிசி வெளியிட்டது.  


தகுதி பெற்ற நேபாளம் மற்றும் ஓமன்:


இந்த தொடரில் விளையாடுவதற்கான தகுதியை  நேபாளம் மற்றும் ஒமன் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.


அதன்படி, இன்று நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் முதலில் களமிறங்கிய பஹ்ரைன் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஓமன் அணி 14.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் இன்று 109 ரன்கள் எடுத்து  10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான தகுதியை ஓமன் அணி பெற்றது.


அதேபோல், நேபாளத்தில் இன்று (நவம்பர் 3) நடைபெற்ற மற்றொரு போட்டியில், முதலில் களமிறங்கிய   ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நேபாளம் அணி 17. 1ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நேபாளம் அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளது.


இவ்வாறாக 18 அணிகள் தற்போது தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்கள் ஆப்பிரிக்கா தகுதிச் சுற்றில் தீர்மானிக்கப்படும் . இந்த போட்டிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Most Hundreds in WCC : உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த டாப் 5 வீரர்கள்!