டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் நேரடியாக தொடருக்கு தகுதி பெற, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய முன்னாள் சாம்பியன்கள் தகுதிச்சுற்று போட்டிகளில் ஆடி வெற்றி பெற்று முன்னேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


இந்த நிலையில், உலககோப்பைத் தொடரின் தகுதிச் சுற்றின் முதல் போட்டியிலே 2014-ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணி தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள நமீபியாவிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.




இந்த நிலையில், டி20 உலககோப்பையிலே இரு முறை சாம்பியன் வென்ற அணி என்ற பெருமையை தற்போது வரை தன்வசம் வைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஹோபர்ட் மைதானத்தில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறப்போவதற்கான தகுதிச் சுற்றில் ஆடும் உலககோப்பையை வென்ற அணிகள் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மட்டுமே. இவர்களுடன் நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், மற்ற அணிகளை எளிதாக வென்று இந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்றே அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.


ஆனால், ஜாம்பவான் அணிகளான இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ்  அடித்து துவம்சம் செய்துவிட்டனர் நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள். தகுதிச்சுற்றில் ஆடி வரும் அணிகளிலே ஜிம்பாப்வே, நமீபியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகள் இந்த தகுதிச்சுற்றில் ஆடுவதற்கான தகுதிப் போட்டிகளிலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு மிகப்பெரிய அணிகளை வீழ்த்திய அனுபவமும் உண்டு.




இதனால், இந்த முறை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் முன்னேறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. சூப்பர் 12 சுற்றில் உள்ள பலமான அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க ஏற்கனவே ஆப்கானிஸ்தான் உள்ள நிலையில், அவர்களுடன் ஜிம்பாப்வே, அயர்லாந்து, நமீபியா ஆகிய அணிகளில் ஏதாவது இரு அணிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


அதேசமயத்தில், முதல் போட்டியிலே தோல்வியை தழுவியதால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் உள்ளது. நிச்சயமாக, முதன்மை சுற்றாக நடைபெற்று வரும் இந்த தகுதிச்சுற்று போட்டியில் விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


மேலும் படிக்க : Watch Video : 4 பந்துகளில் 4 விக்கெட்..! கடைசி ஓவர் த்ரில்..! ஆஸ்திரேலியாவை அலறவிட்ட முகமது ஷமி..


மேலும் படிக்க : IND vs AUS Warm Up Match: என்னா எறி.. இதுதான் என்னோட வெறி.. பீல்டிங்லையும் கிங் என நிரூபித்த கோலி.. வைரல் வீடியோ!