T20 World Cup 2022: பரபரப்பான கடைசி ஓவரின் இறுதி நான்கு பந்துகளில் ஆஸ்திரேலியாவின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி பயிற்சி ஆட்டத்தில் அசத்தியுள்ளார்.
2022ம் ஆண்டுக்கான உலககோப்பை போட்டித்தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. முதலில் தகுதிச் சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில், ஏற்கனவே தகுதி பெற்ற அணிகள் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து வரும் 23-ந் தேதி விளையாட உள்ளது.
அவ்வகையில் இன்று காலை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சார்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 57 ரன்களும், சூர்யாகுமார் யாதவ் 50 ரன்களும் எடுத்திருந்தனர்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களாக களம் கண்ட ஆரோன் பின்ச் மற்றும் மிட்சல் மார்ஷ் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 41 ரன்கள் குவித்தது. மிட்சல் மார்ஷ் 18 பந்துகளில் 35 ரன்களில் வெளியேற அதன் தொடர்ச்சியாக ஸ்மித்தும் 11 ரன்களில் நடையை கட்டினார். அடுத்துவந்த வீரர்கள் தொடர்ந்து சொதப்ப, மறுபுறம் நங்கூரம் போல் நச்சென்று நின்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் அரைசதம் கடந்து அசத்தினார்.
இந்நிலையில் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்த போட்டி முழுவதும் பந்து வீசாத முகமது ஷமி கடைசி ஓவரை வீச வந்தார். போட்டி மிகவும் பரபரப்பை அடைந்த போது போட்டியில், முதல் இரண்டு பந்துகளில் ஆஸ்திரேலிய அணி நான்கு ரன்கள் அடித்தது. மூன்றாவது பந்தை எதிர் கொண்ட பேட் கம்மின்ஸ் பந்தை லாங் ஆன் சைடில் தூக்கி அடித்தார்.
எல்லோரும் அந்த பந்து சிக்ஸர் போய்விட்டது என நினைக்க லாங் ஆன் சைடில் பீல்டிங் செய்து கொண்டு இருந்த விராட் கோலி பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச் போட்டியின் தன்மையை அப்படியே மாற்றியது. அதன் பின்னர் ஷமி வீசிய மூன்று பந்துகளிலும் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் கடைசி நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.